2014-11-11 14:17:37

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 1


RealAudioMP3 தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களும் முதல் முறையாகச் சந்தித்தபோது, கிளிண்டன் அவரிடம், "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று சொன்னபின், தன் மனதில் இருந்த ஓர் எண்ணத்தைத் தயக்கத்துடன் கூறினார்: "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, அந்த முகத்தில் தெரிந்த கோபம், வெறுப்பு இவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று கிளிண்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.
அவரது தயக்கத்தைப் புரிந்துகொண்ட நெல்சன் மண்டேலா அவர்கள், அவருக்குப் பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எல்லாம் எங்கிருந்து வந்தன என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இந்தத் திசையில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்துவிட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை' என்று எனக்குள் எழுந்த இச்சிந்தனைகள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்நேரத்தில் மற்றொரு குரலும் எனக்குள் ஒலித்தது: 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே' என்று அந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது" என்று மண்டேலா அவர்கள், கிளிண்டன் அவர்களுக்குப் பதிலளித்தார். - Tony Campolo “Let Me Tell You a Story” (2000)

நெல்சன் மண்டேலா அவர்கள், தன் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்ததால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்ததால், தன் எஞ்சிய வாழ்நாட்களை சுதந்திரமாக வாழமுடிந்தது. 2013ம் ஆண்டு, தனது 96வது வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த நெல்சன் மண்டேலா அவர்கள், உலகின் தலை சிறந்த ஒரு தலைவராக, மனிதராக வாழ்ந்தார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், நெல்சன் மண்டேலா அவர்கள், தன் வாழ்நாளெல்லாம் வெறுப்பு என்ற சிறைக்குள் வெந்து போயிருப்பார். வரலாற்றில் ஒரு மாமனிதர் என்று தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க இன்றைய விவிலியத் தேடல் நம்மை அழைக்கிறது. புனித மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் தனித்துவம் மிக்க உவமைகளில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. விதைகளும் களைகளும், நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல், விலைமதிப்பற்ற முத்து, ‘கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலை’ ஆகிய நான்கு உவமைகளில் நம் தேடலை சென்ற சில வாரங்கள் மேற்கொண்டோம். இன்று முதல், அடுத்த சில வாரங்கள், மத்தேயு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ள நான்கு கதை வடிவ உவமைகளில் நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.
இந்த நான்கு உவமைகளில் முதலாவது உவமை - மத்தேயு நற்செய்தி 18ம் பிரிவில் காணப்படும் 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'. இந்த உவமை, 'நன்றியில்லாத பணியாள் உவமை', 'இரக்கமற்ற பணியாள் உவமை', 'கொடுமையான பணியாள் உவமை' (Ungrateful Servant, Unmerciful Servant, or Wicked Servant) என்று பலவாறாகப் பெயர் பெற்றுள்ளது. நன்றி, இரக்கம், மன்னிப்பு இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்பதையும், இவை இல்லாதபோது, அங்கு கொடுமை தோன்றுகிறது என்பதையும் இந்த வேறுபட்டத் தலைப்புக்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் இணைபிரியாது வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளார் உருவாக்கிய புகழ்பெற்ற 'அமைதி செபத்தில்' நாம் காண்கிறோம்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்."

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் தன் சீடர்களுக்கு ஒரே ஒரு செபத்தை மட்டுமே சொல்லித் தந்தார் என்பதை நாம் அறிவோம். 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்று துவங்கும் அந்த உலகப் புகழ்பெற்ற செபத்தில், "எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும்" (மத்தேயு 6:12) என்ற அர்த்தமுள்ள, அழகான வேண்டுதலைச் சொல்லித் தந்தார். மன்னிப்பு பெறுவதற்கு ஓர் அடிப்படை நிபந்தனையாக, மன்னிக்கும் மனம் நமக்கு இருக்கவேண்டும் என்பதை இயேசு இந்த செபத்தின் வழியே கற்றுத்தந்தார்.

மன்னிப்பை மையப்படுத்தி இயேசு சொல்லித்தந்த பல பாடங்களில், மூன்று பாடங்கள் கதைவடிவில் அமைந்த உவமைகளாக நம்மை அடைந்துள்ளன. கடன்பட்டிருந்த இருவருக்கு அவர்களின் கடன்கள் மன்னிக்கப்பட்டன என்ற உவமையை லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் வாசிக்கிறோம். அதையொத்த உவமையே, மத்தேயு நற்செய்தி, 18ம் பிரிவில் நாம் காணும் 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'. மன்னிப்பின் சிகரம் என்று கூறப்படும் உலகப் புகழ்பெற்ற உவமையான, 'காணாமற்போன மகன் உவமை', லூக்கா நற்செய்தி, 15ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று உவமைகளும் கூறப்பட்டச் சூழல்களும் நமக்குத் தேவையான பாடங்களைப் புகட்டுகின்றன.

நாம் இன்று தேடலை மேற்கொண்டுள்ள 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை' எச்சூழலில் சொல்லப்பட்டது என்பதைச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும்போது, அவரை எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான் பேதுருவுக்கும் எழுந்தது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்வண்ணம் இயேசு 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'யைக் கூறினார். ஆனால், அந்த உவமையைக் கூறுவதற்கு முன், அவருக்கும் பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், தீவிரமான சவால்களை நமக்குமுன் வைக்கின்றது. இதோ அந்த உரையாடல்:
மத்தேயு நற்செய்தி 18: 21-22
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 70x7=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. வாழ்க்கைப் பாடம். இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள்.
இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40 என்ற எண்கள் விவிலியத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 7 என்ற எண் நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியை பேதுரு கேட்டபோது, ஏதோ பெரியதொரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும் என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும். இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.
இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறியிருந்தன. தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' (லூக்கா 23:34) என்று கல்வாரியில் இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியதுபோல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றி இத்தேடலின் துவக்கத்தில் நாம் சிந்தித்தோம். நெல்சன் மண்டேலா அவர்கள் வழங்கிய மன்னிப்பினால், இனவெறியில் மூழ்கியிருந்த தென்னாப்ரிக்க அரசு நலமடைந்ததா என்று நமக்குத் தெரியாது, ஆனால், மண்டேலா அவர்கள் முற்றிலும் நலம் பெற்றார் என்பதை இவ்வுலகம் புரிந்துகொண்டது.
நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

மனித குடும்பம் இன்று அனுபவித்துவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். மன்னிப்பு என்ற மருந்தால் இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.