2014-11-11 15:49:22

லெபனான் அரசியல்வாதிகள் நாட்டின் அரசியல் அமைப்பை மீறுகின்றனர், முதுபெரும் தந்தை ராய்


நவ.11,2014. லெபனான் அரசியல்வாதிகள் தங்களின் சில்லறைத்தனமான ஆதாயங்களுக்காக, அரசு நிறுவனங்களை முடக்கி, அரசின் பதவிகளில் காலியிடங்களை ஏற்படுத்தியுள்ளனர் மற்றும் நாட்டின் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் என்று குறை கூறியுள்ளார் அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர் ஒருவர்.
லெபனான் கத்தோலிக்க முதுபெரும் தந்தையரும், ஆயர்களும் இத்திங்களன்று தொடங்கியுள்ள எட்டாவது பொது அவையில் இவ்வாறு உரைத்த, மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை Bechara Boutros Rai அவர்கள், லெபனான் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
நாட்டில் கடந்த மே 25ம் தேதியிலிருந்து அரசுத்தலைவர் பதவி காலியாக இருப்பது குறித்து கவலை தெரிவித்த முதுபெரும் தந்தை Rai அவர்கள், அரசியல் சக்திகள், தேர்தல் சட்டத்தில் ஓர் உடன்பாட்டுக்கு வராமல் காலத்தை நீட்டுகின்றன எனவும், இதனால் சனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைக்கின்றன எனவும் கூறினார்.
லெபனான் நாட்டின் சட்டப்படி, அரசுத்தலைவரின் பதவி மாரனைட் கிறிஸ்தவர்க்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயினும், அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் முன்வைக்கும் தடைகளால் அரசுத்தலைவர் இடம் கடந்த ஐந்து மாதங்களாகக் காலியாக உள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.