2014-11-11 15:49:10

நைஜீரிய அரசியல்வாதிகள், போகோ ஹராம் அமைப்புக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட பேராயர் கைகாமா அழைப்பு


நவ.11,2014. நைஜீரிய அரசியல்வாதிகள், தேர்தல் பிரச்சாரங்களைக் கைவிட்டு, போகோ ஹராம் இஸ்லாம் தீவீரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றிணைவதற்கு நேரம் வந்துள்ளது என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
வட கிழக்கு நைஜீரியாவின் Potiskum நகரின் உயர்நிலைப் பள்ளியொன்றில் இத்திங்கள் காலையில்(நவ.10), மாணவர்கள் செபத்திற்காக ஒன்றுகூடிய நேரத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
போகோ ஹராம் அமைப்பு இவ்வன்முறையை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும்வேளை, இந்நிகழ்வு குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama அவர்கள், இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவது தனக்கு வியப்பைத் தரவில்லை என்று கூறினார்.
நைஜீரியாவின் Borno மற்றும் Adamawa மாநிலங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதையும் விடுத்து, இப்பகுதிகளில் போகோ ஹராம் அமைப்பினர் முன்னேறி வருவது கேள்வியை எழுப்பியுள்ளது என்றுரைத்த பேராயர் கைகாமா அவர்கள், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல்வாதிகள் அதிகமாக பரபரப்பாக உள்ளனர் என்று குறை கூறினார்.
மேலும், ஐ.நா. பொதுச்செயலரும் இவ்வன்முறைக்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
போகோ ஹராம் அமைப்பு, மேற்குலக கல்விமுறையை எதிர்க்கின்ற ஓர் ஆயுதக்குழு எனச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.