2014-11-11 15:48:55

திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் சேவையை அதிகார அமைப்புக்குள் மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்


நவ.11,2014. பிறருக்குச் சேவை செய்வதிலிருந்து நம்மைத் தொலைவில் வைக்கும் சோதனைகளை நாம் எதிர்க்க வேண்டும், அதேநேரம், இயேசு போன்று, கைம்மாறு கருதாமல் நாம் பணிபுரிந்து, நமது சேவையை அதிகார அமைப்புக்குள் மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய நற்செய்தி வாசகமான, “பயனற்ற பணியாளர்கள்”(லூக்.17,1-6) பற்றிய இயேசுவின் உவமையை மையமாக வைத்து, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
நாள் முழுவதும் உழைத்து பின்னர் வீட்டிற்கு வரும் பணியாள், ஓய்வெடுப்பதை விட்டு விட்டு தனது முதலாளிக்குப் பணிவிடை செய்வது பற்றிக் கூறும் “பயனற்ற பணியாளர்கள்” பற்றிய நற்செய்திப் பகுதி, ஒரு கிறிஸ்தவருக்கு, பணிவிடை என்றால் என்ன என்பது குறித்து நமக்குப் போதிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்தப் பணியாளை அவரது தொழிற்சங்கத்துக்கும் போய் ஆலோசனை கேட்குமாறு நம்மில் சிலர் கூறலாம், ஆனால் இயேசுவோ, பணிவிடை என்பது முழுமையானது, ஏனெனில் அவரின் பாதை இத்தகைய பணிவிடை எண்ணம் கொண்டது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணிவிடை பெற அல்ல, பணிபுரியவே வந்தேன் என்ற இயேசு தம்மை ஒரு பணியாள் என்றே காட்டுகிறார் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, நமது சோம்பேறித்தனத்தால் இத்தகைய பணிவிடை மனநிலையிலிருந்து நம்மை நாம் தூர வைக்கலாம் என்றும் கூறினார்.
சோம்பேறித்தனம், நம்மை வேலையிலிருந்து தூர வைக்கின்றது மற்றும் இது தன்னலத்துக்கும் இட்டுச் செல்கின்றது என்றும், பல கிறிஸ்தவர்கள் திருப்பலிக்குச் செல்வார்கள், நல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே உதவுவார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் பயனற்ற பணியாள் என்று சொல்வதற்கு, சேவையில் தாழ்ச்சி எனும் அருளை நம் ஆண்டவர் தருகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.