2014-11-10 15:41:24

திருத்தந்தை: விசுவாசத்தின் வெளிப்பாடே பிறரன்பு நடவடிக்கைகள்


கிறிஸ்துவின் இரத்தத்தாலும் உயிர்த்த ஆண்டவரின் ஆவியாலும் புனிதப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொருவரும் விசுவாசம் எனும் கொடையில் நிலைத்திருந்து, கிறிஸ்தவ சாட்சிய வாழ்வை தொடரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித இலாத்தரன் பேராலய அர்ப்பண விழா குறித்து தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு கோவிலின் அர்ப்பணவிழா சிறப்பிக்கப்படும்போதெல்லாம் அது நமக்கு , வரலாற்றில் திருஅவையின் உயிர்துடிப்பான செயல்பாடுகளை, அதாவது ஆன்மீகக் கோவிலை நினைவுபடுத்துவதாக உள்ளது என்றார்.
நம் விசுவாசத்தில் என்றும் நிலைத்திருந்து முன்னோக்கி நடைபோடுவது அவ்வளவு எளிதானது அல்ல எனினும், முன்னோக்கி நடைபோடவேண்டியது அவசியம், ஏனெனில், நாம் உரைப்பதை வைத்தல்ல, ஆனால் நம் செயல்பாடுகளை வைத்தே நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகின் மீட்பராம் இறைமகன் இயேசுகிறிஸ்துவில் தன் விசுவாசத்தை அறிக்கையிடும் மக்கள் சமூகத்தைக் கொண்டதே திருஅவை, இந்த விசுவாசம், பிறரன்பு நடவடிக்கைகளின் மூலம் செயலாகிறது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தின் வெளிப்பாடே பிறரன்பு நடவடிக்கைகள், பிறரன்பு நடவடிக்கைகளுக்கான விளக்கமே விசுவாசம் என எடுத்துரைத்தார்.
இன்றும் திருஅவையானது, இயேசுகிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசத்தை தாழ்ச்சியுடனும் வீரமுடனும் அறிக்கையிட்டு, பிறரன்பின் சாட்சியாக செயல்படவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நோக்குடனேயே திருஅவையின் அமைப்புகளும் மேய்ப்புப்பணி நிறுவனங்களும் செயல்படுகின்றன என்றுரைத்தார்.
ஜெர்மனியின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.