2014-11-10 15:02:23

தனது சாதுரியமான பேச்சால் இத்தாலியைக் காப்பாற்றியவர் (St. Leo the Great)


அக்காலத்தில் ஐரோப்பாவில் ஹூன் இனப் பேரரசு, ஜெர்மனியின் ரைன், டான்யூப் ஆற்றுப் பகுதிகளை உள்ளடக்கி, பால்டிக் கடல் வரை பரவியிருந்தது. ஹூன் பேரரசின் படைத்தலைவரான அத்தில்லா என்பவர், உரோமைப் பேரரசர் மூன்றாம் வலென்டீனியனின் சகோதரியான ஹொனோரியா என்பவரை மணந்துகொள்ள விரும்பினார். எனவே மணப்பெண்ணை மிகுந்த செல்வங்களோடு தன்னிடம் அனுப்பித்தர வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் உரோமைப் பேரரசின்மீது போர்தொடுக்கப் போவதாகவும் மிரட்டினார் அத்தில்லா. ஆனால் வலென்டீனியன் தன் சகோதரியை அனுப்ப மறுத்துவிட்டார். அதேநேரம் கி.பி.452ம் ஆண்டில் அத்தில்லா வட இத்தாலியின்மீது படையெடுத்து Aquileia போன்ற பல நகரங்களைச் சூறையாடி உரோமை நோக்கி வந்து கொண்டிருந்தார். எனவே அத்தில்லாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, திருத்தந்தை லியோ அவர்கள் தலைமையில் மூன்றுபேர் கொண்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பினார் உரோமைப் பேரரசர் வலென்டீனியன். திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவை மாந்துவா நகரில் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். அத்தில்லாவும் அவருடைய படைகளும் படையெடுப்பைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. மேலும், திருத்தந்தை லியோ அவர்கள், அத்தில்லாவின் முன்நின்று பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில், பிரமாண்டமான ஒரு மனிதர், குருவுக்கு உரிய உடையை அணிந்துகொண்டு, கையில் ஒரு வாளை ஏந்தியவராய் தன்னையும் தனது படையையும் மிரட்டியது போன்ற ஒரு காட்சியை அத்தில்லா மட்டும் பார்த்ததாகவும், அதனால் பயந்துபோன அத்தில்லா பணிந்தார் எனவும் ஒரு வரலாற்றாசிரியர் எழுதி வைத்துள்ளார். புனித திருத்தந்தை முதலாம் லியோ அவர்கள், திருஅவை வரலாற்றில் "பெரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட முதல் திருத்தந்தையாவார். இத்தாலியன் டஸ்கன் மாநிலத்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர், கி.பி.440ம் ஆண்டுமுதல் 461ம் ஆண்டு அவரின் இறப்புவரை திருஅவையை வழிநடத்தினார். கால்செதோன் நான்காம் பொதுச் சங்கத்தில், கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள் குறித்த கிறிஸ்தியல் விவாதத்தில் இவரின் பங்கு பெரிதும் பாராட்டப்படுகிறது. திருத்தந்தை புனித பெரிய லியோ அவர்கள் விழா நவம்பர் 10.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.