2014-11-08 14:26:57

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலய அர்ச்சிப்புப் பெருவிழா சிந்தனை


RealAudioMP3 வயதில் வளர, வளர நமக்குள் மலரும் நினைவுகளும் வளரும். பொதுவாகவே, அவை மகிழ்வைத் தரும். அதுவும், நாம் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து வெகு தூரத்தில், வேற்று நாட்டில் வாழ்ந்தால், இந்த நினைவுகள், நமது வேர்களைத் தேடிச்செல்லும் ஆவலைக் கூட்டும். நாம் பிறந்த வீடு, திருமுழுக்கு பெற்ற கோவில், பயின்ற பாலர் பள்ளி இவற்றைக் காண்பதற்கு மேற்கொள்ளும் பயணத்தில் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றால், அவர்களுக்குக் கதை, கதையாய் சொல்லி மகிழ்வோம்.
இன்னும் ஒரு படி மேலே சென்று, நம் பெற்றோர் பிறந்த வீடு, அல்லது, நம் தாத்தா, பாட்டி பிறந்த வீடு என்று நமது முந்தையத் தலைமுறையினரின் வேர்களைத் தேடிச் செல்லும்போது, ஆர்வம் கூடுதலாக இருக்கும். அவ்வேளையில், நம் பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ உடன் இருந்தால், அந்தப் பயணம் ஒரு புனிதப் பயணமாக மாறும். 60, 70 அல்லது, 100 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பிறந்து, வளர்ந்த வீட்டைக் காணும் பெற்றோர், தாத்தா, பாட்டி இவர்களின் கண்களில் தெரியும் ஒளி, கண்களின் ஓரத்தில் சின்னதாக உருவாகும் ஈரக்கசிவு இவையெல்லாம் அந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமாக மாற்றும்.
முதல் பிறந்த நாள், பள்ளியில் முதல் நாள், முதல் சைக்கிள் சவாரி, முதல் கிணற்றுக் குளியல், முதல் வெளியூர் பயணம் என்று நாம் அசைபோடும் 'முதல்' அனுபவங்கள் அனைத்துமே பெரும்பாலும் மனதை நிறைவடையச் செய்கின்றன. விவரம் தெரிந்து, நாம் முதல் முதலாகக் கோவிலுக்குச் சென்றது, இந்த முதல் அனுபவங்களில் ஒரு தனியிடம் வகிக்க வாய்ப்புண்டு.

கிறிஸ்தவ மறை என்ற குழந்தை, முதல் முதலாக, வெளிப்படையாக கோவிலுக்குச் சென்ற அற்புத அனுபவத்தைக் கொண்டாட இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்தக் குழந்தைக்கு ஏறத்தாழ முன்னூறு வயதான பிறகே இந்த அனுபவம் கிடைத்தது. அதுவரை, கிறிஸ்தவ மறை என்ற குழந்தைக்கு இவ்வுலகில் வரவேற்பு கிடைக்கவில்லை. வழிபடுவதற்கு இடமின்றி, அச்சத்துடன், அடைபட்ட அறைகளில், குகைகளில், இரகசியமாக இறைவனை வணங்கி வந்தது அக்குழந்தை.
கி.பி. 324ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி, கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த பெருநாள். அன்று, திருத்தந்தை, புனித முதலாம் சில்வெஸ்டர் அவர்கள், உரோம் நகரில் எழுப்பப்பட்டிருந்த 'புனித மீட்பர் ஆலய'த்தை அர்ச்சித்தார். அந்த ஆலயம், பிற்காலத்தில், திருமுழுக்கு யோவான், நற்செய்தியாளர் யோவான் இவர்களின் பெயர்களையும் இணைத்து, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலயம் என்று அழைக்கப்பட்டது. கிறிஸ்தவ மறையின் முதல் கோவிலாக, தாய் ஆலயமாகத் திகழும் இப்பேராலயத்தின் அர்ச்சிப்புத் திருநாளை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

கோவில் அர்ச்சிப்பு என்பது ஒரு சிறப்பான நாள் என்றாலும், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தின் அர்ச்சிப்பு என்பது வரலாற்று சிறப்பு மிக்கத் திருநாள். இச்சிறப்பைப் புரிந்துகொள்ள, கிறிஸ்தவ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த முதல் மூன்று நூற்றாண்டுகளை நினைவில் கொணர்வது உதவும். இயேசு அடைந்த கொடுமையான கல்வாரிக் கொலைக்குப் பின், யூதர்களும், உரோமையரும் இயேசுவின் சீடர்களையும், கிறிஸ்தவர்களையும் வெறியுடன் வேட்டையாடி வந்தனர். எனவே, கி.பி. நான்காம் நூற்றாண்டின் துவக்கம் வரை, கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளங்களை வெளியிடவும், வழிபாடுகளை மேற்கொள்ளவும் அஞ்சினர். நண்பர்களின் இல்லங்களில், அல்லது, பூமிக்கடியில் தோண்டப்பட்ட குகைகளில் தங்கள் வழிபாடுகளை நடத்திவந்தனர்.
306ம் ஆண்டு உரோமையப் பேரரசராகப் பதவியேற்ற கான்ஸ்டன்டைன் அவர்கள், தன் அன்னை, புனித ஹெலெனா அவர்களின் தூண்டுதலால், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை முடிவுக்குக் கொணர்ந்தார். 313ம் ஆண்டு, அவர் வெளியிட்ட 'மிலான் அறிக்கை' வழியே, கிறிஸ்தவ மதம், ஏனைய மதங்களைப் போலவே உரிமைகள் பெற்ற மதம் என்றும், கிறிஸ்தவர்கள் இனி தயக்கமின்றி தங்கள் மதத்தைப் பின்பற்றலாம் என்றும் உறுதிப்படுத்தினார். மத வெறியர்களுக்கு அஞ்சி, பதுங்கிக்கிடந்த கிறிஸ்தவர்கள், இந்த அறிக்கையைத் தொடர்ந்து, துணிந்து வெளியேறி, தங்கள் இறைவனுக்கென முதல் கோவிலை எழுப்பி, அதை 324ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி அர்ச்சித்தனர். எனவே, இந்த அர்ச்சிப்புத் திருநாள், ஒரு கட்டிடமாக உயர்ந்த கோவிலின் அர்ச்சிப்பு மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் என்ற சமுதாயமும் ஒரு கோவிலாக உயர்ந்து நின்றதைக் கொண்டாடும் திருநாள். மதவெறியை வென்று, மதச் சுதந்திரத்தைப் பறைசாற்றும் ஒரு திருநாள்.

கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்த மதச் சுதந்திரத்தைக் கொண்டாடும் இந்த நன்னாளில், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்து, அல்லது வழிபாடுகளில் ஈடுபட அஞ்சி மறைந்து வாழும் கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்க்கிறோம். அதேபோல், தங்கள் மத, இன, மொழி, கலாச்சார உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத சிறுபான்மை சமுதாயங்களையும் நினைத்துப் பார்க்கிறோம்.
உன்னதமான மதங்களின் பெயரையும், ஆண்டவன் பெயரையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிப்படைவாதிகள், வன்முறைகளை வளர்த்து வருகின்றனர். அதேபோல், மத நம்பிக்கையற்ற அரசுகளும், கம்யூனிசக் கொள்கை என்ற பெயரால், இழைத்துவரும் கொடுமைகள் கூடிவருகின்றன. ஆலய அர்ச்சிப்பு என்ற புனிதமான நாளைக் கொண்டாடும் இதே நவம்பர் 9ம் தேதி, 1938ம் ஆண்டு, ஜெர்மனியில், யூத இன அழிப்பு துவங்கியது என்ற வரலாற்றுப் பதிவு மனதைப் புண்படுத்துகிறது.

உலகில் சமயச் சுதந்திரம் எந்நிலையில் உள்ளது என்ற உலக அறிக்கையை 'Aid to the Church in Need' என்ற ஓர் பிறரன்புப் பணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நவம்பர் 4ம் தேதியன்று வெளியிட்டனர். இவ்வறிக்கையின்படி, உலகிலுள்ள 196 நாடுகளில் 116 நாடுகள் சமயச் சுதந்திரத்தைப் பல வழிகளில் இழந்துள்ளன என்றும், இவற்றில், 20 நாடுகள் மதவெறிக் கொடுமைகளை அதிகமாக அனுபவித்து வருகின்றன என்றும் தெரியவருகிறது.
ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈரான், ஈராக், சிரியா, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் சமய அடிப்படைவாதிகளாலும், மியான்மார், சீனா, வடகொரியா, போன்ற நாடுகளில் அரசினாலும் சமயச் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. மதம் சார்ந்த வன்முறைகள் எழும்போது, வழிபாட்டுத் தலங்களே தாக்குதல்களின் முதல் இலக்காக அமைகின்றன.
300 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்துவந்த வன்முறைகளிலிருந்து விடுதலை பெற்று, முதல் முறையாக வழிபாட்டு உரிமையைக் கொண்டாடிய கிறிஸ்தவர்களை நினைவில் கொள்ளும் இத்திருநாளன்று, சமயச் சுதந்திரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கும், அவர்களைத் துன்புறுத்தும் அடிப்படைவாதிகளுக்கும், அரசுகளுக்கும் இறைவன் நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.

இஞ்ஞாயிறு நாம் கொண்டாடும் பெருவிழாவுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களும் ஆலயம் என்ற கருத்தை மையப்படுத்தியுள்ளன. அடிமைத்தனத்தில் துன்புறும் மக்களுக்கு, ஆலயத்தையும், அங்கிருந்து புறப்படும் நதியையும், இறைவாக்கினர் எசேக்கியேல், நம்பிக்கை தரும் அடையாளங்களாக காட்டுகிறார். இறைவன் வாழும் இல்லம், கற்களால் கட்டப்படும் ஆலயம் மட்டுமல்ல, நமது உடலும் அவர் வாழும் இல்லம் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். இறைவனைத் துரத்தும் அளவுக்கு வர்த்தகங்கள் பெருகிவிட்ட எருசலேம் ஆலயத்திலிருந்து, இயேசு வர்த்தகர்களைத் துரத்தும் காட்சி, இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

பாபிலோனிய அடிமைத்தனத்தில் துன்புற்ற இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசேக்கியேல் தரும் ஆறுதல் வார்த்தைகள், முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன. அடிமைத்தனத்தில் இருப்போர், மீண்டும் விடுதலைபெற்று, தங்கள் கோவிலுக்குச் செல்ல முடியும் என்றும், அக்கோவிலிலிருந்து புறப்படும் நீர் அனைத்தையும் வாழச்செய்யும் என்றும், இறைவாக்கினர் கூறுவது, நிறைவுதரும் வார்த்தைகள்:
இறைவாக்கினர் எசேக்கியல் 47: 1-2, 8-9, 12
ஆண்டவரின் தூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்: அவற்றின் இலைகள் உதிரா: அவற்றில் கனிகள் குறையா.
மதவெறியால் இன்றைய உலகில் பெருக்கெடுத்து ஓடும் இரத்த ஆறுகள் காய்ந்து, அங்கு அமைதி ஆறாகப் பெருகவேண்டும்; மதவெறிச்செயல்களுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மக்கள் இறைவாக்கினர் கூறும் இந்த வார்த்தைகளால் ஓரளவு நம்பிக்கை பெறவேண்டும் என்று இறைவனை மன்றாடுவோம்.

அப்பாவி மக்கள் கொள்ளும் நம்பிக்கையால், உலகம் முற்றிலும் மாறிவிடும் என்று கற்பனை செய்வது நடைமுறை வாழ்வாகாது. வெறுப்பு என்ற இருள் சூழ்ந்திருந்தாலும், அதன் நடுவே நம்பிக்கை நம்மை வழிநடத்த வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நம்பிக்கையின் ஒளி' (Lumen Fidei) என்ற சுற்றுமடலில் கூறியுள்ள வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்குத் தேவையான நம்பிக்கையைத் தருகின்றன:
நம்பிக்கை என்பது, அனைத்து இருளையும் துரத்தியடிக்கும் ஒளி அல்ல. மாறாக, இரவில் நாம் மேற்கொள்ளும் பயணத்தில், நமது காலடிகளுக்கு வழிகாட்டுவதற்குப் போதுமான ஒளி இது. துன்புறுவோருக்கு, அனைத்தையும் விளக்கும் வகையில் கடவுள் பதில் சொல்வதில்லை; துன்புறுவோருடன் தானும் இருக்கிறேன் என்ற உணர்வைத் தருவதே, கடவுள் தரும் பதில். (Pope Francis - Lumen Fidei, No. 57)

இயேசு கோவிலைச் சுத்தம் செய்யும் கடுமையான காட்சி கோவில் அர்ச்சிப்புத் திருநாளன்று, நமக்கு நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது புதிராகத் தெரிகின்றது. கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார்.
"என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று இயேசு அன்று விடுத்த கட்டளை, இன்றும் நம் கிறிஸ்தவ சமுதாயத்தின் மீது விழும் ஒரு சாட்டையடி என்பதை உணர்வது நல்லது. கோவில், கடவுள் என்ற புனித அம்சங்களை வியாபாரப் பொருள்களாக மாற்றுவது, அன்று மட்டுமல்ல, இன்றும் பல கோவில்களில், சிறப்பாக, புகழ்பெற்றத் திருத்தலங்களில் நிகழ்ந்துவருகின்றது. வர்த்தகச் சந்தைகளாக மாறியுள்ள இத்திருத்தலங்களில் இறைமகன் சாட்டையுடன் நுழைந்து, அங்கு செழித்துவரும் வர்த்தகத்தை விரட்டியடித்து, புனிதத்தை மீண்டும் நிலைநாட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.
தனிப்பட்ட வாழ்வில், நாம் ஏன் கோவிலுக்குச் செல்கிறோம் என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம். 'நான் இதைச் செய்கிறேன், நீர் இதைச் செய்யும்' என்ற வர்த்தக ஒப்பந்தங்களாக நமது செபம், வழிபாடு ஆகியவை மாறி வருகின்றனவா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ளலாம். வர்த்தக, வியாபார மனநிலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இறைவனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து, மன நிறைவு பெற்று வருவதை நம் வழிபாடுகளின், செபங்களின் முதன்மை நோக்கமாக மாற்ற முயல்வோம்.

பாஸ்கா விழா காலத்தில் எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள் குறைந்தது பல ஆயிரங்களாக கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய் இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த இயேசுவின் மனம் சாதாரண மனம் அல்ல... எருசலேம் கோவிலில் அவர் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமைதான். இந்தப் புதுமையை எண்ணிப் பார்க்க நமக்கு திருஅவை இன்று ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
கோபக்கனல் தெறிக்க இயேசு இந்தக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” (யோவான் 2:19) என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார். இதைக் குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது, கடவுள் மீது இயேசு கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையாகவும் கருதலாம்.

இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். (யோவான் 2:21) முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். கடவுள் கட்டியெழுப்பிய இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது; கடவுளை விலை பேச முடியாது; வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம்; இறைவனை எந்தத் தடையும் இல்லாமல் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகியக் கோவில், இயேசுவின் உயிர்த்த உடல். அதேபோல், இந்த அழகிய அம்சங்கள் கொண்ட கோவிலாக நம்மையும் இறைவன் உயிர்ப்பிக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.
மனித வரலாற்றில் மதச் சுதந்திரத்தைப் பொன்னெழுத்துக்களால் பொறித்த புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காப் பேராலய அர்ச்சிப்பு நாளன்று, இவ்வுலகில் அனைவரும், அனைத்துச் சுதந்திரமும் பெற்று மகிழும் புத்தம் புது பூமி ஒன்றை இறைவன் உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.