2014-11-07 15:29:01

நாம் நாகரீகமற்றவர்களாக செயல்படுகிறோம், எருசலேம் பேராயர் Zerey


நவ.07,2014. எருசலேமில் அண்மையில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குக் கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளை, இத்தகைய செயல்கள் மனிதாபிமானமற்றது மற்றும் சமுதாயத்தைச் சின்னாபின்னமாக்குவது என்று கவலை தெரிவித்துள்ளார் மெல்கிதே-கிரேக்க வழிபாட்டுமுறை பேராயர் ஒருவர்.
இப்புதனன்று, கிழக்கு எருசலேமில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த மக்கள் மத்தியில் ஒரு வெள்ளை வாகனம் அத்துமீறி நுழைந்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், கடந்த 15 நாள்களில் நடைபாதை மக்களுக்கு எதிராக இரு வாகனத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதல்கள் குறித்து CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த எருசலேம் மெல்கிதே-கிரேக்க வழிபாட்டுமுறை பேராயர் Joseph Jules Zerey அவர்கள் இத்தகைய பயங்கரமான செயல்கள் எருசலேமில் மட்டுமல்ல, ஈராக்கிலும் சிரியாவிலும் இடம்பெறுகின்றன என்று கூறினார்.
பிறரைப் பாதுகாக்கவும், மதிக்கவும், ஒவ்வொருவருக்கும் அன்பையும் மனித உரிமையையும் வழங்கவும் பொறுப்புக்களைக் கொண்டிருப்போர், தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வன்முறைகள் நிறுத்தப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பேராயர் Zerey.
ஹமாஸ் இஸ்லாம் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.