2014-11-07 15:51:41

நவ.08,2014. புனிதரும் மனிதரே : திருத்தந்தையர்கள் குறித்து முன்னுரைத்தவர் ( St. Malachy )


1095ம் ஆண்டு அயர்லாந்தின் அர்மார்க் நகரில் பிறந்த மலாக்கி, தனது கல்வியை முடித்தபின் 1122ம் ஆண்டு, அருள்பணியாளராகவும், 1125ம் ஆண்டு கொனார் (Conor) நகரின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு மீண்டும் 1129ம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. தனது பணியைச் சரியாகச் செய்ய இயலாததால், 1138ம் ஆண்டு தன் பதவியைத் துறந்து உரோம் நகருக்கு திருப்பயணியாக, பயணம் மேற்கொள்ள விரும்பினார். அவ்வாறு செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் சிளெயர்வாக்ஸ்(Clairvaux) என்ற இடத்தில் சிஸ்டர்சீயன் துறவு சபையைச் சார்ந்த புனித பெர்னார்டு என்பவரைச் சந்தித்தார். அங்கேயே ஒரு துறவியாகத் தங்கிவிட ஆவல் கொண்டாலும், புனித பெர்னார்டின் ஆலோசனையைக் கேட்டு தன் சொந்த நாடான அயர்லாந்திற்கே திரும்பினார். அங்கு மெல்லிஃபோன்ட் (Mellifont) துறவு இல்லத்தைக் கட்டியதோடு, அயர்லாந்திற்கான திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். மீண்டும் பிரான்சின் கிளெய்ர்வாக்சில் புனித பெர்னார்டை சந்திக்க வந்தபோது, அப்புனிதரின் கைகளிலேயே தன் உயிரை விட்டார். இவர் உடலை கைகளில் தாங்கிய புனித பெர்னார்டு, 'இவர் உண்மையிலேயே ஒரு புனிதர்' என அறிக்கையிட்டார். இதையே 1190ம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் கிளமென்ட் அதிகாரப்பூர்வமாக திருஅவையில் அறிவித்தார். புனித மலாக்கி, தான் வாழ்ந்த காலத்தில் நிறைய புதுமைகளை ஆற்றியுள்ளார். எண்ணற்ற விடயங்களை அவர் முன்னறிவித்துள்ளார், அதில் திருத்தந்தையர்களைக் குறித்தவை ஏராளம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.