2014-11-07 15:28:08

திருத்தந்தை : திருச்சிலுவைக்கு எதிரிகள்போன்று வாழும் கிறிஸ்தவர்கள் இக்காலத்திலும் உள்ளனர்


நவ.07,2014. வெளித்தோற்றத்தில் கிறிஸ்தவர்களாகவும், உள்ளார்ந்த வாழ்வில் திருச்சிலுவைக்குப் பகைவர்களாகவும் வாழ்வது குறித்து எச்சரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் இந்நாள் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப்போக்கு கொண்டவர்களாய் வாழும் இவ்வுலகின் குடிமக்கள், விண்ணகத்தின் குடிமக்களாய் இருக்கமாட்டார்கள் என்று கூறினார்.
புனித பவுலடியார் காலத்தில் கிறிஸ்தவர்களில் இருந்த இரு குழுக்கள் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒரு குழுவினர் விசுவாசத்தில் முன்னோக்கிச் சென்ற கிறிஸ்தவர்கள், அடுத்த குழுவினர் கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று வாழ்ந்த கிறிஸ்தவர்கள் என விளக்கினார்.
இவ்விரு குழுக்களுமே திருஅவையில் ஒன்றாக இருந்தனர், அவர்கள் ஞாயிறு திருப்பலிக்குச் சென்றனர், ஆண்டவரைப் போற்றினர், தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக்கொண்டனர் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களிடமிருந்த வேற்றுமை பற்றியும் எடுத்துச்சொன்னார்.
இரண்டாவது குழு, கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று செயல்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் திருச்சிலுவைக்கு எதிரிகளாகச் செயல்பட்டனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இன்றும் கிறிஸ்துவின் திருச்சிலுவைக்கு எதிரிகள் போன்று செயல்படும் கிறிஸ்தவர்கள் உள்ளனர், நம்மை அழிவுக்கு இட்டுச்செல்லும் உலகப்போக்கு நிறைந்த சோதனைகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.