2014-11-07 15:27:48

திருத்தந்தை : கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து நற்செய்திக்குச் சாட்சி சொல்ல வேண்டும்


நவ.07,2014. இன்றைய நம் காலத்தின் பல பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், அர்த்தமுள்ள விதத்தில் பதிலளிக்க ஆவல் கொண்டால், நாம் சகோதரர்களாகப் பேசவும், செயல்படவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம் நாம் அனைவரும் ஒரே ஆண்டவராகிய கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள் என்பதை ஒவ்வொருவரும் எளிதில் ஏற்பார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
ஃபோக்கலாரே இயக்க ஆயர்கள் நண்பர்கள் அமைப்பு நடத்திய, 33வது கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாற்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவில் பொதுவான விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்களை ஒன்றாகப் பார்ப்பது ஒளிமயமான மற்றும் கவர்ந்திழுக்கும் அடையாளமாய் உள்ளது என்றும் கூறினார்.
ஒன்றிப்புக்கு இட்டுச்செல்லும் பாதையை விடாஉறுதியுடனும், பொறுமையுடனும், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடனும் நாம் தேட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமய சுதந்திரமின்மை, கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மை சமயக் குழுக்களும் நசுக்கப்படுதல், பயங்கரவாதம், புலம்பெயர்வோர் நெருக்கடி, மிகைப்படுத்தப்பட்ட சமயச்சார்பின்மை, குடியேற்றதாரர் ஆகிய விவகாரங்கள், நம் மனசாட்சிக்குச் சவாலாக உள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.
“திருநற்கருணை, ஒன்றிப்பின் பேருண்மை” என்ற தலைப்பில் இத்திங்கள் முதல் இவ்வெள்ளி முடிய நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏறக்குறைய 33 நாடுகளிலிருந்து கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.