2014-11-07 15:28:54

கர்தினால் Tauran : பாகிஸ்தானில் இருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு கண்டனம்


நவ.07,2014. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைக் குற்றம் சுமத்தி, ஓர் இளம் அப்பாவித் தம்பதியர் உயிரோடு எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளது குறித்து, தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை குற்றம் புரிந்தனர் என்று பொய்க்குற்றம் சுமத்தி, 28 வயதான Shazad Masih என்பவரும், அவரது மனைவி, 25 வயதான Shama என்பவரும் இச்செவ்வாயன்று உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இவ்வன்செயல் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், காட்டுமிராண்டித்தனமான இச்செயல்கள், தன்னை அதிர்ச்சியுறச் செய்ததாகத் தெரிவித்தார்.
உண்மையில், இத்தகைய இக்கொடுஞ்செயல்கள் முன்னர் ஒருவர் வாயடைத்து நிற்கின்றார் என்றும், மதத்தின் பெயரால் இப்படி நடத்தப்பட்டுள்ள செயல் அதிகமாக வேதனை தருகின்றது என்றும், இத்தகைய குற்றங்களுக்கும், செயல்களுக்கும் மதம் ஒருபோதும் நியாயம் சொல்ல இயலாது என்றும் கூறினார் கர்தினால் Tauran.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, இச்சட்டத்தின்கீழ் ஏறக்குறைய அறுபது பேருக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறிய கர்தினால் Tauran அவர்கள், இவ்விவகாரத்தில் அனைத்துலகத் தலையீடும், உரையாடலும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனிதமற்ற இவ்வன்செயலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் தங்களின் வன்மையான கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
லாகூருக்கு அருகே, Kasur மாவட்டத்தின், Chak என்ற கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் செங்கல் சூளையில் உழைப்பதற்கு, தன் குடும்பத்தோடு வந்தவர், Shazad. பிழைப்பு தேடி வந்த Shazad அவர்களின் மனைவி, தன் வீட்டிலிருந்த பழைய காகிதங்களை எரித்தபோது, அதில் திருக்குரானின் பக்கங்கள் இருந்தன என்று யாரோ ஒருவர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் திரண்டு வந்த 300க்கும் அதிகமான மக்கள், Shazad மற்றும் Shamaவை இழுத்துச் சென்று முதலில் கற்களால் எறிந்தனர் என்றும், இறுதியில் செங்கல் சூளையில் எரித்துக் கொன்றனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.