2014-11-06 16:01:35

வேளாண்மை ஓர் அழைப்பு - கர்தினால் பீட்டர் டர்க்சன்


நவ.06,2014. அழைப்பு என்ற வார்த்தையை தனிப்பட்ட ஒருவரின் விருப்பு, வேறுப்புக்களுடனும், அவர் ஆற்றவேண்டிய பணிகளுடனும் மட்டும் இணைப்பதைக் காட்டிலும், 'அழைப்பு' என்பது இறைவனிடமிருந்து வருவது என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவரின் சார்பில் பேசிய அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
"நம்பிக்கை, உணவு, சுற்றுச்சூழல்" என்ற கருத்தரங்கில், திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் சாபில் பங்கேற்கும் இயேசு சபை அருள்பணியாளர் Michael Czerny அவர்கள், இவ்வியாழன் வழங்கிய உரையில், வேளாண்மை ஓர் அழைப்பு என்ற கருத்தை வலியுறுத்தினார்.
வர்த்தகம், மேலாண்மை என்ற உலகம் சார்ந்த செயல்பாடுகளை 'அழைப்பு' என்று குறிப்பிடுவது தற்போதைய பழக்கமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்ட அருள்பணி Czerny அவர்கள், வேளாண்மையை ஓர் அழைப்பாகக் கருதுவது மிகவும் பொருத்தம் என்று தன் உரையில் விளக்கினார்.
விவிலியத்தின் பல பகுதிகளில் வேளாண்மை ஒரு பின்னணியாக அமைந்துள்ளது என்றும், இயேசுவின் படிப்பினைகளில் பல, வேளாண்மையுடன் தொடர்புடையவை என்றும் அருள்பணி Czerny அவர்கள், எடுத்துரைத்தார்.
சமுதாயத்தின் அடித்தள மக்களுடன் இணைந்து உழைக்கும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை அண்மையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேளாண்மை, நில உரிமை, சுற்றுச் சூழல் ஆகியவற்றைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதைக் குறிப்பிட்ட அருள்பணி Czerny அவர்கள், படைப்பையும், சுற்றுச்சூழலையும் மையப்படுத்தி சுற்றுமடல் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடுத்த ஆண்டு வெளியிடவிருப்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.