2014-11-06 13:55:24

புனிதரும் மனிதரே : சவாலை செபத்தால் வெற்றி கண்டவர் (St. Dorothy)


அக்காலத்தில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை கொலை செய்வதற்காகப் பகைவர்கள் வீதிகள் வழியே இழுத்துச் சென்றனர். வழியில் அப்பெண்ணை சந்தித்த இளம் வழக்கறிஞர் ஒருவர் அப்பெண்ணை மிகவும் கேவலமாக எள்ளி நகையாடி அப்பெண்ணுக்கு ஒரு சவால் விட்டார். பெண்ணே, நீ ஏன் உனது கொள்கையில் விடாப்பிடியாய் இருக்கிறாய், நீ இறந்தபின்னர் செல்லும் இடத்திலிருந்து எனக்கு மூன்று ஆப்பிள் பழங்களையும் மூன்று ரோஜா மலர்களையும் அப்படியே மரத்திலிருந்தும் செடியிலிருந்தும் பறித்த நிலையில் அனுப்பு என்று கிண்டல் செய்தார் அவர். ஏனெனில் இவ்விரண்டுமே கிடைக்காத குளிர் காலம் அது. அப்பெண்ணும் புன்முறுவலுடன் பகைவர்களுடன் நடந்து சென்றார். ஆனால் அவர் கொலை செய்யப்படும் நேரத்தில் செபித்தார். அப்போது வானதாதர் ஒருவர், ஒரு கூடையில் வாடாத மூன்று ஆப்பிள் பழங்களையும் மூன்று ரோஜா மலர்களையும் வைத்திருக்கக் கண்டார். அன்று மாலை தனது வீட்டின்முன் ஒரு குழந்தை ஒரு கூடையில் மூன்று ஆப்பிள் பழங்களையும் மூன்று ரோஜா மலர்களையும் வைத்துக்கொண்டு நின்றதைப் பார்த்து அதிர்ச்சியானார் அந்த வழக்கறிஞர். தியோஃபிலுஸ் என்ற அந்த வழக்கறிஞர் பின்னர் கிறிஸ்தவராக மனம் மாறினார். கி.பி.320ம் ஆண்டுவாக்கில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காக இவர் கொலைசெய்யப்பட்டார். மறைசாட்சி தியோஃபிலுஸ் அவர்கள் கிண்டல் செய்த அந்தப் பெண்தான் புனித டாரத்தி. உரோமைப் பேரரசர் தியோக்ளேசியன், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி கொலை செய்துவந்த அக்காலத்தில் துருக்கி நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க காப்பாதோச்சா மாநிலத்தில் செசரியா என்ற ஊரில் வாழ்ந்தவர் டாரத்தி. கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக டாரதி கொலைசெய்யப்பட்டார். இவரது விழா பிப்ரவரி 06.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.