2014-11-06 16:01:06

"நம்பிக்கை, உணவு, சுற்றுச்சூழல்" - பன்னாட்டு கருத்தரங்கில் கர்தினால் பீட்டர் டர்க்சன்


நவ.06,2014. இன்றைய உலகில் திருஅவை என்ற கருத்தை வெளிப்படுத்தும், Gaudium et Spes என்ற கொள்கை திரட்டின் வழியே, உலக மக்களின் ஆவல், ஏக்கம், நம்பிக்கை ஆகியவற்றில் கத்தோலிக்கத் திருஅவையும் முழுமையாகப் பங்கேற்கிறது என்பதை உணரலாம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 5, இப்புதன் முதல் இவ்வெள்ளி முடிய அமெரிக்காவின் Minnesota மாநிலத்தில் அமைந்துள்ள புனித தோமா பல்கலைக் கழகம், "நம்பிக்கை, உணவு, சுற்றுச்சூழல்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு கருத்தரங்கிற்கு, திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அனுப்பியுள்ள துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
எபோலா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்ய வத்திக்கானில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கும் காரணத்தால், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கமுடியாத கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் சார்பில் இக்கருத்தரங்கில் தன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள அருள்பணி Michael Czerny அவர்களை அனுப்பியுள்ளார்.
கிறிஸ்தவ, விவிலிய விழுமியங்களின்படி, உணவு ஒரு பொருள் அல்ல, மாறாக, வாழ்வின் ஆதாரம் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்களின் உரை, உணவும், அதன் ஆதாரமான வேளாண்மையும் மக்களின் தினசரி வாழ்விலிருந்து அன்னியமாகி வருகிறது என்று குறிப்பிடுகிறது.
நில உரிமை, காடுகளின் அழிப்பு, தனியுடமையாகும் தண்ணீர், வீணாகும் உணவு என்ற கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அண்மைய உரைகளில் வலியுறுத்தி வருகிறார் என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இத்தகைய உலக நிலை நம் மனச்சான்றை தட்டி எழுப்பும் பல அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன என்று தன் துவக்க உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.