2014-11-06 16:16:00

தொடர்பு சாதன தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மனிதகுலத்தை மேன்மையாக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் - அருள்பணி Lombardi


நவ.06,2014. தொடர்பு சாதன தொழில் நுட்ப முன்னேற்றங்கள், மனிதகுலத்தை மேன்மையாக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வத்திக்கான் வானொலி எப்போதும் நம்பி வந்துள்ளது என்று இவ்வானொலி நிலையத்தின் இயக்குனர், அருள்பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
டிஜிட்டல் வழி வானொலி என்ற மையக்கருத்துடன் இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய வத்திக்கான் வானொலி இயக்குனர் அருள்பணியாளர் Lombardi அவர்கள், இவ்வானொலி கடந்து வந்த வரலாற்று மைல்கல்களைக் குறிப்பிட்டு பேசினார்.
அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதர்களின் வளர்ச்சிக்கு பயன்படவேண்டும் என்பதில் வத்திக்கான் வானொலியை உருவாக்கிய திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களும், குலியெல்மோ மார்கோனி அவர்களும், உறுதியாக இருந்தனர் என்று அருள்பணியாளர் Lombardi அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.
1931ம் ஆண்டு துவங்கப்பட்ட வத்திக்கான் வானொலி, 60 நாடுகளிலிருந்து வந்துள்ள 200க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு நாளும் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் புதியத் தொழிநுட்பத்துடன், இன்று பணியாற்றிவருவதை, அருள்பணியாளர் Lombardi அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.