2014-11-06 15:54:56

திருத்தந்தை பிரான்சிஸ் - தவறிச் சென்ற ஆடுகளை எதிர்பார்த்து, கோவில் வாசலைத் திறந்துவைத்து காத்திருக்கும் மேய்ப்பர்களைக் கண்டால் மனம் வருத்தம் கொள்கிறது


நவ.06,2014. குற்றம் புரிந்தோரைக் காப்பாற்றக் கரம்நீட்டும் வேளையில், தன் கரங்கள் கறைபடுமே என, உண்மையான கிறிஸ்தவர்கள் கவலைப்படுவதில்லை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தன்னுடைய நல்ல பெயருக்குக் களங்கம் வந்தாலும், அது குறித்து கவலைப்படாமல், அடுத்தவருக்கு உதவுவதை, நல்லாயன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.
லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள காணமற்போன ஆடு, காணமற்போன நாணயம் ஆகிய இரு உவமைகளைப் பின்னணியாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார்.
இயேசு பாவிகளோடு உணவருந்தியது, பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் பெரும் இடறலாக இருந்ததென்று கூறியத் திருத்தந்தை, அக்காலத்தில் நாளேடுகள் இருந்திருந்தால், இயேசுவின் நிலை என்னவாகியிருக்கும் என்ற கேள்வியை எழுப்பினார்.
காணாமற்போன ஆட்டைத் தேடிச்செல்லும் ஆயனைக் குறித்துப் பேசிய வேளையில், தவறிச் சென்ற ஆடுகள் மீண்டும் வரும் என்று எதிர்பார்த்து, கோவில் வாசலைத் திறந்துவைத்து காத்திருக்கும் மேய்ப்பர்களைக் கண்டால் மனம் வருத்தம் கொள்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
அரைகுறை மனதோடு மேய்ப்புப்பணியில் ஈடுபடுவது பயனளிக்காது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தனது நலம், நற்பெயர் என்பனவற்றைக் காத்துக் கொள்வதிலேயே கருத்தாயிருக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், கிறிஸ்தவர்கள், இயேசு காட்டிய வழியில் செல்வதில்லை என்று கூறினார்.
தங்கள் பெயர் கெட்டுவிடும் என்ற பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, முத்திரை குத்தப்பட்டவர்களைத் தேடிச் செல்லும் துணிவை, நம் ஒவ்வொருவருக்கும், தாய் திருஅவைக்கும் நல்லாயன் வழங்க மன்றாடுவோம் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
"தேவையில் இருப்போர் மீது அக்கறையின்றி இருப்பது, கிறிஸ்தவர் என்ற நிலைக்கு ஏற்புடையதன்று" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட Twitter செய்தியாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.