2014-11-06 15:59:23

திருத்தந்தை பிரான்சிஸ் - குடும்பம் என்ற அடிப்படை அம்சத்தில் மலாவி நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது


நவ.06,2014. முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத் தரம் ஆகிய அம்சங்களில் மலாவி நாட்டு மக்கள் கடினமான தடைகளைச் சந்தித்து வந்தாலும், குடும்பம் என்ற அடிப்படை அம்சத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின் பல நாடுகளில் உள்ள ஆயர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரோம் நகர் வந்து, திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' என்ற சந்திப்பை தற்போது மேற்கொண்டுள்ள மலாவி நாட்டு ஆயர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், மலாவி நாட்டு மக்கள், குடும்பம் என்ற அடிப்படை உண்மையில் கொண்டிருக்கும் உறுதியையும், நம்பிக்கையையும் பாராட்டினார்.
குடும்பம் என்ற அடித்தளம் தற்போதைய தலைமுறையினருக்கு பல வழிகளில் ஒரு சவாலாக அமைந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அடித்தளத்தை உறுதியாக்குவது ஆயர்களின் முக்கிய பணி என்று வலியுறுத்தினார்.
மலாவி நாட்டிற்கு இளையோர் ஒரு முக்கிய செல்வம் என்றுரைத்தத் திருத்தந்தை, குடும்ப வாழ்விலும், துறவற, மற்றும் குருத்துவ வாழ்விலும் ஆர்வம் கொள்ளும் இளையோரை பக்குவமாக வழிநடத்துவதில் ஆயர்கள் தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மலாவி நாட்டில், வறுமையாலும், நோயாலும், குறிப்பாக, HIV / AIDS நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களால் அனாதைகளாக விடப்பட்டுள்ள குழந்தைகள் ஆகியோரை தான் சிறப்பாக எண்ணிப் பார்ப்பதாக, ஆயர்களுக்கு வழங்கிய உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.