2014-11-05 16:11:41

லூர்து திருத்தலத்தில் கூடியிருக்கும் பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து


நவ.05,2014. மறைபரப்புப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு மறைமாவட்டங்கள், தொடர்ந்து விவிலிய மகிழ்வை பரப்பும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நவம்பர் 4, இச்செவ்வாயன்று, பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம் லூர்து மாநகரில் துவங்கியுள்ள வேளையில், அந்த ஆண்டுக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
பிரான்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Georges Pontier அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் சார்பில் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
விரைவில் துவங்கவிருக்கும் ‘அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு’, ஆயர்கள், குருக்கள், துறவியர் இவர்களுக்கு நம்பிக்கையும், மகிழ்வும் அளிக்கும் வேளையில், இறைமக்களுக்கும் இவ்வாண்டு நம்பிக்கையைத் தரவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளுக்கும், குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளுக்கு பிரான்ஸ் நாட்டு ஆயர்கள் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, பிரான்ஸ் ஆயர் பேரவை தன் பிறரன்புப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
லூர்து திருத்தலத்தில் கூடியிருக்கும் ஆயர்களையும், இன்னும் பிரான்ஸ் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் அனைவரையும், லூர்து அன்னையும், புனித பெர்னதெத் அவர்களும் தங்கள் பரிந்துரையால் காத்தருள தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி, திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.