2014-11-05 16:14:43

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை : ஆயர் பதவி மதிப்புக்கானது அல்ல, அது பணி செய்வதற்கே


நவ.05,2014. கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கு தூயஆவியானவர் தொடர்ந்து தம் கொடைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம் புதன் மறையுரைகளில் கண்டுவருகிறோம். இத்தகைய கொடைகளுள் ஒன்று அருள்பணியாளர்களின் மறைப்பணி. குருத்துவம் என்னும் அருளடையாளத்தின் வழியாக ஆயர்களும், குருக்களும் தியாக்கோன்களும் இறைமக்களை வழிநடத்தி பாதுகாக்க அழைப்புப் பெற்றுள்ளார்கள். அனைத்திற்கும் மேலாக, கிறிஸ்துவில் நமக்கு புதிய வாழ்வை வழங்கும் அருளடையாளங்களின் கொண்டாட்டம் வழியாக நம்மை வழிநடத்தவும், பாதுகாக்கவும் அழைப்புப் பெற்றுள்ளார்கள். இதன் வழியாக, திருஅவையானது, அதிகார ஆட்சி அமைப்பையும், தாய்மைப் பண்பையும் கொண்டது எனவும் தெரிந்துகொள்கிறோம். அதன் திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்கள், அதனுடைய அருள்நெறிப் பண்புக்கு பணிபுரிபவர்களாக உள்ளனர். நம்மிடையே இயேசுவின் இருப்புக்கு, வாழும் அடையாளங்களாக இருந்து கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்த அழைப்புப் பெற்றிருக்கும் ஆயர்களின் பணியில் இதனை நாம் தெளிவாகக் காணலாம். திருத்தூதர்கள் போன்று, அவர்களின் வழிவந்தவர்களாக இருக்கும் ஆயர்கள், திருத்தந்தையுடன் ஒரே குழு அமைப்பாக உள்ளனர். இந்த ஆயர்களின் ஒன்றிப்பை, அண்மையில் இடம்பெற்ற ஆயர்கள் மாமன்றம் போன்ற கூட்டங்களில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஆயர்களின் அன்றாட ஒன்றிப்பிலும் காணலாம். ஆயர்கள், அருள்பணியாளர்கள், தியாக்கோன்களின் பணி வழியாக கிட்டும், திருஅவை ஆட்சி அமைப்பாகிய நமது புனித அன்னையின் ஒன்றிப்பில் நாம் அனைவரும் இறைவனுடனும், ஒருவர் ஒருவருடனும் நெருங்கி வர உதவுமாறு இறைவனிடம் மன்றாடுவோம்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.