2014-11-05 16:15:06

இத்தாலிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் காசாப் பகுதியில் பயணம்


நவ.05,2014. இத்தாலியத் தலத்திருஅவை புனித பூமியுடன் கொண்டுள்ள ஆழ்ந்த உறவை வலியுறுத்தும் வண்ணம், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ அவர்களும் ஏனைய ஆயர்களும் காசாப் பகுதியில் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
காசாப் பகுதியில் இஸ்ரேல் படையினரின் தாக்குதல்களால் அழிந்துபோன பல கோவில்களையும், ஏனைய கிறிஸ்தவக் கட்டிடங்களையும் நவம்பர் 4, இச்செவ்வாயன்று பார்வையிட்ட இக்குழுவினர், தொடர்ந்து, Sderot என்ற நகரையும் பார்வையிட்டனர்.
இப்பகுதிகளில் துன்புறும் மக்களின் அனுபவங்களை நேரடியாகக் கேட்டு, அவற்றைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் இவ்வியாழனன்று பகிர்ந்துகொள்ளப் போவதாக கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
பல ஆண்டுகளாக போரையும், அதன் அழிவுகளையும் மட்டுமே கண்டுவரும் இம்மக்களிடம், குறிப்பாக, இங்குள்ள குழந்தைகளிடம் காணப்படும் புன்முறுவல் தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும், தனக்கு நம்பிக்கை தந்ததாகவும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.
இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்கள் புனித பூமியில் திருப்பயணங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும், ஒவ்வொரு திருப்பயணமும் இம்மக்களுக்கு ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கர்தினால் பஞாஸ்கோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.