2014-11-05 15:37:49

அமைதி ஆர்வலர்கள் : 1960ல் நொபெல் அமைதி விருது (Albert John Lutuli)


நவ.05,2014. “பறக்க முடியவில்லையெனில் ஓடு, ஓட முடியவில்லையெனில் நட, நடக்க முடியவில்லையெனில் தவழ். ஆனால் நீ என்ன செய்தாலும் எப்பொழுதும் முன்னோக்கியே சென்றுகொண்டிரு”. இவ்வாறு சொன்னவர் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு சமஉரிமை கிடைப்பதற்காகப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். 1960ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற இன்கோசி ஆல்பர்ட் ஜான் லூத்துலி அவர்களும், இதே நோக்கத்திற்காக தென்னாப்ரிக்காவில் போராடியவர். இவர் தென்னாப்ரிக்க மண்ணின் மக்களாகிய கறுப்பினத்தவருக்கு எதிரான நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்துச் செயல்பட்டதால் சிறை சென்றவர், பல தடைகளை எதிர்கொண்டவர். தென்னாப்ரிக்காவின் ஜூலு(Zulu) என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் லூத்துலி அவர்கள் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. ஆனால் இவர், 1898ம் ஆண்டுவாக்கில், அக்காலத்தில் ரொடேசியா என்றழைக்கப்பட்ட இக்காலத்திய புலாவாயோவுக்கருகில் பிறந்தார் எனச் சொல்லப்படுகிறது. செவன்த் டே அட்வன்டிஸ்ட் கிறிஸ்தவ சபை போதகர் ஜான் புன்யன் லூத்துலி என்பவரின் மூன்றாவது மகன் இவர். ஜூலு இனத்தின் பெயராகிய முவும்பி என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர் ஓர் ஆசிரியராகவும், அரசியல்வாதியாகவும், அவரது ஜூலு இனத்தின் தலைவராகவும் இருந்தார்.
ஆல்பர்ட் லூத்துலி அவர்கள், தென்னாப்ரிக்காவின் பத்து இலட்சம் கறுப்பின மக்களின் சார்பாக, அவர்களின் குடியுரிமைக்காக, வெள்ளையின அரசின் நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்து, வன்முறையற்ற வழியில் போராடினார். இதற்காக, 1960ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு வெளியே, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு வெளியே, நொபெல் அமைதி விருது பெற்ற முதல் நபர் ஆல்பர்ட் ஜான் லூத்துலி. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் விருதையும் இவர் பெற்றிருக்கிறார். உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருந்த மனிதர் இவர். அதேசமயம் வெறுப்புணர்வைச் சகித்துக்கொள்ளாதவர், சமத்துவத்துக்கான தனது போராட்டத்தில் இரும்புப்பிடி கொண்டவர், தனது ஆப்ரிக்க ஜூலு கலாச்சாரத்துக்கும், ஐரோப்பிய கிறிஸ்தவ சனநாயகக் கலாச்சாரத்துக்கும் இடையே ஒத்துணர்வை ஏற்படுத்த முயற்சித்தவர். எனது மக்களைப் போகவிடுங்கள் என்ற தலைப்பில் சுய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
லூத்துலி அவர்களின் குடும்பம், அவர்களின் ஜூலு பழங்குடியினத் தலைமையைத் தொடர்ந்து வகித்துவந்தது. இவரின் தாத்தாவும், அவரைத் தொடர்ந்து இவரது தந்தையும் தலைவராக இருந்தவர்கள். ஆனால் லூத்துலியின் தந்தை கிறிஸ்தவ மறைபோதகராக மாறி தனது வாழ்வின் இறுதிக் காலத்தை ரொடேசியாவில் Matabele மக்கள் மத்தியில் செலவிட்டார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஆல்பர்ட் லூத்துலி, தாயின் உதவியுடன் கல்வி கற்றார். 1917ம் ஆண்டில் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்து, பின்னர் ஆடம்ஸ் கல்லூரியிலும் ஆசிரியர் பயிற்சியில் உயர் கல்வியை முடித்தார். பதினைந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், அனைத்து ஆப்ரிக்கர்களுக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கினார். 1928ல், ஆப்ரிக்க ஆசிரியர் கழகத்தின் செயலராகவும், 1933ல் அதன் தலைவராகவும் பணியைத் தொடங்கினார். அதேநேரம், பொதுநிலையாளராக, கிறிஸ்தவ சபையில் பல ஆண்டுகள் போதகப் பணியைச் செய்துவந்தார். அக்கிறிஸ்தவ சபையிலும் பல பொறுப்புக்களை வகித்தார். தென்னாப்ரிக்க கிறிஸ்தவ அவையின் செயல்திட்ட உறுப்பினராகவும் பணியாற்றினார். சென்னையில் 1938ம் ஆண்டில் நடைபெற்ற அனைத்துலக மறைபோதக கருத்தரங்கில் தென்னாப்ரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கெடுத்தார் இவர். 1948ம் ஆண்டில் இரு மறைபோதக நிறுவனங்கள் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒன்பது மாதங்கள் தங்கி நற்செய்தி அறிவித்தார் ஆல்பர்ட் லூத்துலி.
1927ம் ஆண்டில் சக ஆசிரியர் Nokukhanya Bhengu என்பவரை திருமணம் செய்துகொண்டு Groutvilleல் 1929ம் ஆண்டிலிருந்து வாழத் தொடங்கினார் ஆல்பர்ட் லூத்துலி. இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர். 1936ல், ஜூலு இனத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட இவர், வெள்ளை இன அரசு அவரைக் கட்டாயமாக அதிலிருந்து அகற்றும்வரை அவ்வினத்தின் தலைவராக இருந்தார். தனது இனத்தின் நல்வாழ்வுக்காகவும் அயராது உழைத்தார் இவர். தென்னாப்ரிக்க அரசை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தேசியவாதக் கட்சி 1948ம் ஆண்டில் நிறவெறிப் பாகுபாட்டுக் கொள்கையைக் கொண்டுவந்தது. 1950களில் அக்கொள்கை குறித்த சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டு ஆப்ரிக்கர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் கட்டுப்படுத்தின. 1944ல் ANC என்ற ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், 1952ல் இக்கட்சியின் பிற தலைவர்களுடன் சேர்ந்து அரசின் பாகுபாட்டுக் கொள்கைகளை எதிர்த்தார். இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலாளரானார். அரசு, இக்கட்சியின் நடவடிக்கைகள்மீது தொடர்ந்து தடைகளை விதித்துவந்தது. ஷார்ப்வில்லே படுகொலைக்கு இவர் எதிர்ப்புத் தெரிவித்து தனது கடவுச்சீட்டை எரித்தார். நாடாளுமன்றம் ANC கட்சியை கலைத்தது. அதன் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது. ஆல்பர்ட் லூத்துலி சிறை சென்றார். இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இத்தண்டனை இவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு ஆப்ரிக்கர்களின் உரிமைகளுக்காக வன்முறையின்றி போராடிய ஆல்பர்ட் லூத்துலி அவர்களுக்கு 1960ல் நொபெல் அமைதி விருதும் வழங்கப்பட்டது. நீ வாழ்வதற்கு இரு வழிகள் உள்ளன: ஒன்று. எதுவுமே புதுமை இல்லை என்பது போல் நீ வாழலாம்; அடுத்து, எல்லாமே புதுமை என்பது போலும் நீ வாழலாம்”. இவ்வாறு சொன்ன அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் வழியில் சென்ற பலரின் வாழ்க்கை வரலாறு நமக்குப் பாடமாகட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.