2014-11-04 14:16:32

புனிதரும் மனிதரே - 'பெருக்குமாறின் புனிதர்' (Saint of the broom)


தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா என்ற ஊரில் 1579ம் ஆண்டு பிறந்தவர், மார்ட்டின் டி போரெஸ். இஸ்பானிய உயர்குடியைச் சேர்ந்த யுவான் என்பவருக்கும், அடிமையாகப் பணியாற்றி விடுதலை பெற்ற கறுப்பினப் பெண்மணி அன்னா என்பவருக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் மார்ட்டின். இவருக்கு ஈராண்டுகள் நடந்தபோது, இவரது தந்தை, குடும்பத்தைத் தவிக்கவிட்டுச் சென்றார். இவரது தாய் சலவைத் தொழில் செய்து, சிறுவன் மார்ட்டினையும், தங்கை யுவானாவையும் காப்பாற்றினார்.
குழந்தைப் பருவம் முதல் வறுமை, இனவெறி, அடிமைத்தனம் ஆகிய சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்ட மார்ட்டின், முடிதிருத்தும் பணியைக் கற்றுக்கொண்டார். கூடுதலாக, சில மருத்துவ அறிவையும் வளர்த்துக் கொண்டார். இவற்றைப் பயன்படுத்தி வறியோர் பலருக்கு உதவிகள் செய்துவந்தார்.
இளவயதில் இறையழைப்பை உணர்ந்த மார்ட்டின் அவர்கள், தொமினிக்கன் துறவுச் சபையில் சேர விழைந்தார். அக்காலத்தில் பெரு நாட்டில் நிலவிய ஒரு சட்டத்தின்படி, அடிமைகள் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் துறவுச் சபையில் இணைவது தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, 15 வயது நிறைந்த இளையவர் மார்ட்டின், தொமினிக்கன் துறவு இல்லத்தில் துப்புரவுத் தொழில் செய்யும் பணியாளராகச் சேர்ந்தார்.
இவரது நற்பண்புகளைக் கண்ட துறவு இல்லத் தலைவர் இவரை ஒரு சகோதரராக இணைத்துக்கொண்டார். துறவு இல்லத்தில் மிகத் தாழ்வாகக் கருதப்பட்டப் பணிகளை பகல் முழுவதும் ஆர்வமாக மேற்கொண்ட மார்ட்டின் அவர்கள், இரவு நேரம் முழுவதையும் நற்கருணை ஆராதனையில் செலவிட்டார். இறைச்சி உண்பதை முற்றிலும் தவிர்த்தார். லீமா நகரில் தெருக்களில் சுற்றித் திரிந்த ஆதரவற்றச் சிறுவர் சிறுமிகளுக்கு ஓர் இல்லம் அமைத்து, அவர்களைப் பராமரித்து வந்தார்.
அவ்வேளையில், லீமா நகரில் தொற்றுநோய் பரவியது. இளையவர் மார்ட்டின் அவர்கள், தொற்றுநோயால் தெருக்களில் விடப்பட்ட ஆதரவற்றோரை துறவு இல்லத்திற்குக் கொணர்ந்து கண்காணித்தார். தொற்றுநோயுற்றோர் வந்ததால், துறவு இல்லம் அழுக்கடைந்தது என்றும், துறவு இல்லத்தில் தொற்றுநோய் பரவும் என்றும் எதிர்ப்பு எழுந்தது. அவ்வேளையில் இளையவர் மார்ட்டின் அவர்கள், "சுத்தமாக இருப்பதைக் காட்டிலும், கருணையுடன் வாழ்வதே மேல்" என்று கூறியபடி, எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தன் பணிகளைத் தொடர்ந்தார்.
1639ம் ஆண்டு, தன் அறுபதாவது வயதில் இறையடி சேர்ந்த மார்ட்டின் டி போரெஸ் அவர்களை, 1962ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் புனிதராக உயர்த்தினார். 'பெருக்குமாறின் புனிதர்' (Saint of the broom) என்றும், 'பிறரன்பின் மார்ட்டின்' என்றும் போற்றப்படும் புனித மார்ட்டின் டி போரெஸ் அவர்கள், மிருகங்களோடு பேசும் வல்லமை பெற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இனப் பாகுபாடுகளால் ஒதுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராகவும், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாவதற்குப் பாதுகாவலராகவும் கருதப்படும் புனித மார்ட்டின் டி போரெஸ் அவர்களின் திருநாள் நவம்பர் 3ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.