2014-11-04 15:09:10

நகர்ப்புறமயமாக்கலில் மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் இடம்பெற வேண்டும், திருப்பீட அதிகாரி


நவ.04,2014. நகர்ப்புறமயமாக்கலால் ஏற்படும் தீமைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளில் மக்களை மையப்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.
“மக்களை மையப்படுத்திய நகர்ப்புறமயமாக்கல் : இன்றைய நகரங்களில் இனங்களின் பன்மைத்தன்மையை நிர்வகித்தல்” என்ற தலைப்பில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு கூறினார்.
அதிகரித்துவரும் நகர்ப்புறமயமாக்கல், நம் அனைவரையும் நகரங்களில் உடலளவிலும் பொருளாதார அளவிலும் நெருங்கிவரவைக்கும் அதேவேளையில், இது சமூக, கலாச்சார, சமய மற்றும் பொருளாதாரத் தனிமையையும், பிரிவினையையும், இன்னும் பிற தீமைகளையும் ஏற்படுத்துகின்றது என்பதையும் நாம் உணர வேண்டும் என்று கூறினார் பேராயர் அவ்சா.
நகரங்கள் மிகுந்த வாய்ப்புக்களை வழங்கினாலும், ஊழல் மற்றும் மனித வணிகம், போதைப்பொருள் வணிகம், போதைப்பொருள் பயன்பாடு, நலிந்தவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களையும் பெருக்குகின்றன என்றும் பேராயர் அவ்சா கூறினார்.
அக்டோபர் 31ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவ்சா அவர்கள் இவ்வாறு பல கருத்துக்களை எடுத்துச் சொன்னார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.