2014-11-03 15:53:18

திருத்தந்தை : பகை உணர்வுகளும் வீண் தற்பெருமைகளும் திருஅவையை பலவீனமாக்குகின்றன


நவ.03,2014. பகை உணர்வுகளும் வீண் தற்பெருமைகளும் திருஅவையை பலவீனமாக்குகின்றன என்பதை மனதில்கொண்டு, தாழ்ச்சியுடன்கூடிய உடன்பாட்டை நாம் ஏற்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ சமூகங்களுக்குள் பகை உணர்வுகள் இருப்பது இப்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் ஒரு தீய எடுத்துக்காட்டாக இருந்துள்ளது என்பதற்கு புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறிகிறோம் என்றார்.
விரோத மனப்பான்மையிலும் வீண் தற்பெருமைகளிலும் நாம் வீழ்ந்துவிடாமல் இருக்கவேண்டுமானால், பிறரை, நம்மைவிட உயர்ந்தவர்களாக மதித்து நடத்துவதே சிறந்த வழி என்ற புனித பவுலின் எடுத்துக்காட்டையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னலத்தைத் தேடாமல், பிறர் நலத்திற்காக உழைப்பதுடன், அவர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சி, பிறரன்பு, பிறர்மீது கடுஞ்சொல் கூறாமை போன்ற சூழலில், முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியும் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.