2014-11-03 15:53:59

இரஷ்யப் பேராயர் : புனிதத்துவத்திற்கான பாதை குடும்பம்


நவ.03,2014. திருமண வாழ்வும் குருத்துவத்தைப்போல் ஓர் அழைப்பு என்பதை உணர்ந்து செயலாற்றும்போது அது புனிதத்துவத்திற்கான ஒரு பாதையாக மாறுகின்றது என எடுத்துரைத்தார் இரஷ்யாவின் பேராயர் பவ்லோ பெட்ஸி.
அக்டோபர் மாதத்தில் திருப்பீடத்தில் இடம்பெற்ற குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்டபின் அது குறித்து இரஷ்ய மக்களுக்கு உரை வழங்கிய பேராயர், குடும்ப வாழ்வும் ஓர் அழைப்பே என்பதை உணராமல் நாம் செயலாற்றுவதாலேயே மணமுறிவுகளும், திருமணமின்றி சேர்ந்து வாழ்தலும், அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது என்றார்.
நாம் வாழும் காலத்திலேயே இரஷ்யாவின் செர்னோபில் அணுஆலை விபத்தைக் கண்டுள்ள நாம், தற்போது வேறு வகையான அதாவது, ஆன்மீகச் செர்னோபில் விபத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.
குடும்பங்கள் உடைவதும், திருமணத்தைப் பற்றி புரிந்துகொள்ளாமல், அதன் முக்கியத்துவத்தை உணராமல் இளையோர் வாழ்ந்து வருவதும் ஆன்மீகச் செர்னோபிலின் விளைவே எனவும் கூறினார் பேராயர் பவ்லோ பெட்ஸி.
குடும்பம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய பொருளல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக்கொண்ட உயரிய ஒன்று என்பதையும், அதன் அழகையும் இளையோருக்கு காண்பிக்க வேண்டியது சமூகத்தின் கடமை எனவும் கூறினார் இரஷ்யப் பேராயர் பெட்ஸி.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.