2014-11-01 14:46:26

திருத்தந்தை : இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையும், விண்ணக எருசலேமும் ஒரே மாபெரும் குடும்பம்


நவ.01,2014. புனிதர்களுடனான ஒன்றிப்பு, திருமுழுக்கால் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக மாறியிருக்கும் எல்லாரையும் ஒன்றிணைக்கின்றது, இந்த ஆன்மீகப் பிணைப்பு மரணத்தால் உடைக்கப்படாது, ஆனால் அது மறுவாழ்விலும் தொடரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை நண்பகலில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையும், விண்ணக எருசலேமும் ஒரே மாபெரும் குடும்பம் என்பது பற்றி விளக்கினார்.
இப்பெருவிழா திருவழிபாடு இந்த ஆன்மீகப் பிணைப்புப் பற்றிப் பேசுகின்றது என்றும், எல்லாக் காலங்களின் எண்ணற்ற தூய ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இன்று நாம் இறைவனைப் புகழ்கின்றோம், இவர்கள் சிலவேளைகளில் உலகுக்குக் கடைசியானவர்களாகவும், அதேநேரம் இறைவனுக்கு முதன்மையானவர்களாகவும் இருந்துள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் இடையேயுள்ள இந்த அழகான பிணைப்பு திருவழிபாட்டில் மிக உயர்ந்த மற்றும் மிக ஆழமான விதத்தில் இடம்பெறுகின்றது, சிறப்பாக, திருஅவையின் அங்கத்தினர்களுக்கிடையே ஆழமான ஒன்றிப்பை வெளிப்படுத்தி நிறைவடையச் செய்யும் திருநற்கருணைக் கொண்டாட்டத்தில் இது வெளிப்படுகின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு நாள்கள், நம் அனைவருக்கும் வாழ்வின் இறுதிக் காரியங்கள் பற்றிய விசுவாசத்தின், செபத்தின், சிந்தனையின் ஆழமான நேரங்களாகும், உண்மையில் புனிதர்களின் பெருவிழாவையும், இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவையும் நாம் திருவழிபாட்டில் சிறப்பிக்கும்போது, இவ்வுலகில் வாழும் திருஅவைக்கும், விண்ணில் வாழும் திருஅவைக்கும் உள்ள பிணைப்பை உணருகின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.