2014-10-31 15:19:12

வெப்பநிலை மாற்றம் பற்றிய விவகாரம், நீதியைச் சார்ந்ததுமாகும், பேராயர் Auza


அக்.31,2014. வெப்பநிலை மாற்றம் பற்றிய விவகாரம், சுற்றுச்சூழலை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, நீதி மற்றும் நன்னெறி சார்ந்த விவகாரமாகவும் உள்ளது என்று, ஐ.நா.வில் கூறினார் பேராயர் Bernadito Auza.
“உறுதியான வளர்ச்சி : இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைகளுக்காக வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல்” என்ற தலைப்பில், நியுயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த 69வது பொது அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Auza அவர்கள் இவ்வாறு கூறினார்.
வெப்பநிலை மாற்றம் சிறிய தீவு நாடுகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை முன்வைத்துள்ளவேளை, தங்களின் கட்டுப்பாடுகளையும் மீறி இந்த ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் களையவேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும் என்றும் உரையாற்றினார் பேராயர் Auza.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதையும் ஐ.நா.வில் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Auza அவர்கள், வெப்பநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் அரசியலிலும், பொருளாதாரத்துறைகளிலும் மிகுந்த அர்ப்பணம் தேவை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.