2014-10-31 15:18:51

திருத்தந்தை : தூய ஆவியாரின் பணியாகிய ஒன்றிப்பைத் தேடுங்கள்


அக்.31,2014. இக்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல கிறிஸ்தவ மறைசாட்சிகளால் சிந்தப்படும் இயேசுவின் இரத்தம், ஒன்றிப்பு நோக்கிச் செயல்பட நம்மை அழைக்கிறது மற்றும் நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்க அருங்கொடை இயக்கத் தோழமைக் குழுக்களைச் சேர்ந்த ஏறக்குறைய ஆயிரம் உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்மைத்தன்மையில் ஒன்றிப்பு பற்றியும், போற்றுதல் செபம் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
கத்தோலிக்கத் திருஅவையிலுள்ள அருங்கொடை இயக்கம் போற்றுதல் செபத்தின் அவசியத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் நினைவுபடுத்துகின்றது என்றும், திருஅவையில் போற்றுதல் செபம், அருங்கொடை இயக்கத்தினருக்கு மட்டுமல்லாமல், திருஅவை முழுவதற்கும் தேவையானது என்றும் கூறினார் திருத்தந்தை.
போற்றுதல் செபத்துடன், மன்றாட்டுச் செபம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்நாள்களில் நசுக்கப்பட்டு கொல்லப்படும் நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காகவும், அமைதியற்ற இந்த உலகில் அமைதி ஏற்படவும் வானகத்தந்தையிடம் நாம் வேண்டுதல்களை எழுப்ப வேண்டுமெனவும் கூறினார்.
இறைவனின் அன்னையாம் மரியிடம் செபிப்பது ஒருபோதும் தவிர்க்கப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறுத்துவோருக்கு, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றே என்றுரைத்து, ஆன்மீகக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றியும் கூறினார்.
கத்தோலிக்க அருங்கொடை இயக்கத் தோழமைக் குழுக்கள் இவ்வெள்ளி பிற்பகலில் “புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதற்கான போற்றுதலும் வழிபாடும்” என்ற தலைப்பில் 16வது அனைத்துலக கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.