2014-10-31 15:18:58

திருத்தந்தை : சட்டங்கள்மீது பற்றுதல் கொண்டிருப்பதைவிட அன்பும் நீதியும் மிகவும் முக்கியமானவை


அக்.31,2014. அன்பு, நீதி, இவை சுட்டிக்காட்டும் கருத்துக்களைப் புறக்கணித்து சட்டங்கள்மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் குறித்து தனது கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஓய்வுநாளில் நோயாளியைக் குணப்படுத்துவது முறையா? இல்லையா? என்று இயேசு பரிசேயர்களிடம் கேள்வி கேட்டது பற்றிக் கூறும் நற்செய்தி வாசகத்தை(லூக்.14,1-6) மையமாக வைத்து, இவ்வெள்ளி காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
சட்டங்கள்மீது அதிகப்படியான பற்றுதல் கொண்டிருப்பதைவிட, அன்பு மற்றும் நீதியின் பாதை எவ்வாறு கிறிஸ்துவிடம் இட்டுச்செல்லும் என்பதை விளக்கிய திருத்தந்தை, இயேசு ஓய்வுநாளில் நோயாளியைக் குணமாக்கிய பின்னர், தனது முதுகிற்குப் பின்னால் தம்மை விமர்சித்த பரிசேயர்களை ‘வெளிவேடக்காரர்கள்’ என்று இயேசு கூறியதையும் நினைவுபடுத்தினார்.
சட்டங்கள்மீது பற்றுதல் கொண்டிருக்கும் வாழ்வுமுறை, அன்பிலிருந்தும் நீதியிலிருந்தும் நம்மைத் தூரத்தில் வைக்கின்றது என்றும், இத்தகைய வாழ்வு வாழ்வோர் சட்டங்களைக் கடைப்பிடித்து அன்பையும், நீதியையும் புறக்கணிக்கின்றனர், இத்தகையோர்க்கு வெளிவேடக்காரர் என்ற ஒரேயொரு சொல்லையே இயேசு கொண்டிருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
சட்டங்கள்மீது பற்றுதல் கொண்டிருக்கும் வாழ்வுமுறை தன்னலத்துக்கு இட்டுச்செல்லும் என்றும், இயேசு நமக்கு நெருக்கமாக இருக்கிறார், இதுவே நாம் உண்மையான பாதையில் செல்கிறோம் என்பதன் உண்மையான சான்று என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.