2014-10-31 15:19:42

அரபுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் உதவியுள்ளனர், ஜோர்டன் அரசர்


அக்.31,2014. அரபுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு கிறிஸ்தவர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதால், இக்கிறிஸ்தவச் சமூகங்கள் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கட்டாயமாகப் புலம்பெயர்வது கடுமையான பிரச்சனையாக உள்ளது என்று ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாரத்தில் ஜோர்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அர்மேனிய அரசுத்தலைவர் Serzh Sargsyan அவர்களைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள், மத்தியக் கிழக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் புலம்பெயர்வது எந்த வழியிலாவது தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அர்மேனியர்களுக்கும், அரபு மக்களுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருக்கவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய அர்மேனிய அரசுத்தலைவர், அர்மேனியாவில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப் பின்னர் அந்நாட்டு அகதிகளை வரவேற்ற அரபுத் தலைவர்களுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மேலும், எருசலேமின் அர்மேனிய முதுபெரும் தந்தை Nourhan Manougian அவர்கள், இயேசு திருமுழுக்குப் பெற்ற இடத்துக்கருகில் கட்டப்பட்டுள்ள புதிய அர்மேனிய ஆலயத்தை இவ்வெள்ளியன்று ஆசீர்வதித்து திருவழிபாடும் நிறைவேற்றினார். இதில் அர்மேனிய அரசுத்தலைவர் Sargsyan அவர்களும் கலந்துகொண்டார்.
அர்மேனிய அரசுத்தலைவர் ஒருவர் ஜோர்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.