2014-10-30 14:01:09

புனிதரும் மனிதரே: பிறவியிலேயே பார்வையிழந்தவர்(St.Lucilla)


பழங்கால உரோமையில் வைகறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, சுடர், சுடரொளி எனப் பொருள்படும் லூச்சில்லா என்று பெயரிடுவது வழக்கம். மூன்றாம் நூற்றாண்டில் உரோமையில் வாழ்ந்த தியாக்கோன் நெமெசியுஸ் அவர்களுக்கு லூச்சில்லா என்ற மகள் இருந்தார். ஆனால் லூச்சில்லா, கண்பார்வையின்றிப் பிறந்தார். லூச்சில்லாவும் வளர்ந்தார். ஒருநாள் நெமெசியுஸ், அப்போதைய உரோம் ஆயர் புனித ஸ்தேவான் அவர்களிடம் சென்று தனது மகளுக்குத் திருமுழுக்கு அளிக்குமாறு கேட்டார். லூச்சில்லா திருமுழுக்குப் பெற்ற சிறிது நேரத்துக்குள் பார்வை பெற்றார். இச்செய்தி எங்கும் பரவியது. இதனால் பலர் மதம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவினர். இச்செய்தி பேரரசர் வலேரியன் காதுக்கு எட்டியது. எனவே பேரரசர் நெமெசியுசை சிறையில் வைக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் லூச்சில்லாவை மாக்சிமா என்ற தீய பெண்ணிடம் ஒப்படைத்தார். நெமெசியுசும், லூச்சில்லாவும் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருந்ததால் சில நாள்களிலேயே உரோம் ஆப்பியா சாலையிலிருந்த மார்ஸ் கோவிலுக்கு இவ்விருவரையும் கூட்டிச் சென்று, நெமெசியுஸின் முன்பாகவே லூச்சில்லாவின் தொண்டையை வெட்டிக் கொலை செய்தனர். தனக்கு முன்னரே தனது மகள் விண்ணகம் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தார் நெமெசியுஸ். பின்னர் நெமெசியுசும் உரோம் இலத்தீனா சாலைக்கும் ஆப்பியா சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் தலைவெட்டப்பட்டு இறந்தார். கி.பி.260ம் ஆண்டில் தந்தை நெமெசியுசும், மகள் லூச்சில்லாவும் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர். மறைசாட்சி லூச்சில்லாவின் விழா அக்டோபர் 31. லூச்சில்லா, லூசியா என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.