2014-10-30 15:42:39

உணவின்றி தவிக்கும் பல கோடி மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் - பேராயர் Bernadito Auza


அக்.30,2014. வேளாண்மை, உணவு ஆகியவற்றைக் குறித்து நாம் மேற்கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்கள் வெறும் சடங்காக இல்லாமல், உணவின்றி தவிக்கும் பல கோடி மக்களின் குரல்களுக்குச் செவிமடுக்கும் ஒரு முயற்சியாக இருக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.அவை அமர்வுகளில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernadito Auza அவர்கள், 'வேளாண்மை முன்னேற்றம், உணவு பாதுகாப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களில் இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
வேளாண்மை முன்னேற்றம் குறித்து ஐ.நா. உயர் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின்படி, உலகில் 17 விழுக்காடு மக்கள் பசிக்கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து மகிழும் அதேவேளை, இவ்வுலகில் இன்னும் 85 கோடி மக்கள் கடுமையான பசிக்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது நமக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று பேராயர் Auza அவர்கள் குறிப்பிட்டார்.
நலவாழ்வு, கல்வி, என்ற பல்வேறு தனிமனித உரிமைகள் அனைத்தும் பசிக்கொடுமை என்ற பிரச்சனையைத் தீர்ப்பதால் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை பேராயர் Auza அவர்கள் வெளியிட்டார்.
"குடும்ப வேளாண்மை: உலகை ஊட்டி வளர்த்தல்" என்று இவ்வாண்டு உலக உணவு நாளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையக் கருத்து, உலகப் பசியை நீக்க, குடும்பங்கள் முக்கியமான பங்காற்றவேண்டும் என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது என்று பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.
உணவளிப்பதை மையப்படுத்தி நவம்பர் மாதம் உரோம் நகரில் நடைபெறவிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கைக் குறித்தும், இக்கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றுவார் என்றும் பேராயர் Auza அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.