2014-10-29 15:31:23

பொலிவியா நாட்டின் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.29,2014. தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் அரசுத் தலைவர், Evo Morales அவர்கள், இச்செவ்வாய் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார்.
இத்திங்கள் முதல் புத்தம் முடிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையினால் நடத்தப்பட்ட உலக பொதுமக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 200 பிரதிநிதிகளில் ஒருவராக வந்திருந்த பொலிவியா அரசுத் தலைவர், திருத்தந்தையைச் சந்தித்தது, தனிப்பட்ட ஒரு சந்திப்பே அன்றி, அதிகாரப் பூர்வமான சந்திப்பு அல்ல என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி Federico Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
பொலிவியா நாட்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான Evo Morales அவர்கள், அன்னை பூமியைக் காப்பது பற்றி இக்கூட்டத்தில் உரையாற்ற வத்திக்கான் வந்திருந்தார்.
இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இரண்டாம் முறையாக பொலிவியா அரசுத் தலைவரெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் Evo Morales அவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அதிகாரப் பூர்வமாகச் சந்தித்துள்ளார் என்பதும், பொலிவியா நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் நல்லுறவுகள் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.