2014-10-29 15:38:24

பாகிஸ்தான் சிறுமி, மலாலா யூசுப்சாய் அவர்களுக்கு உலகக் குழந்தைகள் விருது


அக்.29,2014. அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள பாகிஸ்தான் சிறுமி, மலாலா யூசுப்சாய் அவர்கள், உலகக் குழந்தைகள் விருது (World’s Children’s Prize for the Rights of the Child) என்ற மற்றொரு உயர்ந்த விருதையும் பெற்றுள்ளார்.
குழந்தைகள் உரிமைகளைப் போற்றும் மனிதர்களை, ஊடகக் கருத்துக் கணிப்பு வழியே குழந்தைகளே தேர்ந்தெடுக்கும் இம்முறையில், சிறுமி மலாலா அவர்களுடன், குழந்தைகளின் படிப்பறிவை வளர்க்கும் வகையில், Room to Read என்ற கணணி மென்பொருள் நூலகத்தை உருவாக்கிய Microsoft உயர் அதிகாரி John Wood அவர்களும், நேபாளத்தில் குழந்தைகள் கல்விக்கென கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடிவரும் Indira Ranamagar அவர்களும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இம்மூவரில், சிறுமி மலாலா அவர்கள், அதிக வாக்குகளைப் பெற்று இந்த விருதைப் பெறுகிறார்.
சுவீடன் நாட்டு அரசி சில்வியா, அந்நாட்டு பிரதமர் Stefan Löfvén ஆகியோர் முன்னிலையில், அக்டோபர் 29, இப்புதனன்று, இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
உலகின் பல நாடுகளின் குழந்தைகள் பங்கேற்கும் இந்த வாக்களிப்பு முயற்சியின் வழியாக, மலாலா யூசுப்சாய் அவர்களே, அமைதிக்கான நொபெல் விருதையும், உலகக் குழந்தைகள் விருதையும் ஒரே ஆண்டில் பெற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இதற்கு முன்னர், தென் ஆப்ரிக்கத் தலைவர், நெல்சன் மண்டேலா அவர்கள், இவ்விரு விருதுகளையும் 12 ஆண்டுகள் இடைவெளியில் பெற்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.