2014-10-29 15:29:04

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


அக்.29,2014. திருஅவைக் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில், திருஅவை கிறிஸ்துவின் மறையுடல் எனும் ஆன்மீக உண்மைத்தன்மை, என்பது குறித்து நாம் நோக்கியுள்ளோம். இருப்பினும் திருஅவையின் கண்ணால் காணக்கூடிய உண்மை நிலையானது, அதன் பங்குத்தள அமைப்புகளிலும், சமூகங்களிலும் நிர்வாக அமைப்பு முறைகளிலும் வெளிப்படுகின்றது, என தன் புதன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தக் கண்ணால் காணக்கூடிய உண்மை நிலையும் மறைபொருளானதே. ஏனெனில் உலகம் முழுவதும் விசுவாசிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் எண்ணற்ற, அதிலும் குறிப்பாக மறைவாக ஆற்றப்படும் பிறரன்பு நடவடிக்கைகளைத் தன்னுள்ளே திருஅவை கொண்டுள்ளது. இயேசுவின் திருஉடலாக இருக்கும் திருஅவையின் ஆன்மீக, மற்றும், கண்ணால் காணக்கூடியது என்ற இருவேறு கூறுகளை புரிந்துகொள்ளவேண்டுமானால், கடவுளும் மனிதருமாக இருக்கும் இயேசுவை உற்று நோக்கவேண்டிய தேவை உள்ளது. மீட்பெனும் தெய்வீகப் பணிக்கு இயேசுவின் மனிதத்தன்மை சேவையாற்றுவதுபோல், திருஅவையின் ஆழமான ஆன்மீக உண்மைத்தன்மைக்கு, கண்ணால் காணக்கூடிய அதன் கூறு உதவுகிறது என்பதை விசுவாசக் கண்கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வுலகில் கிறிஸ்துவுக்கான தன் சாட்சியம் மூலமாகவும் அருளடையாளங்கள் மூலமாகவும் திருஅவையானது, இறைவனின் கருணையுடன்கூடிய அன்பை அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் உதவித் தேவைப்படுவோருக்கும் எடுத்துரைக்கவும், அதனைக் கொண்டுசெல்லவும் முயல்கிறது. நாம் புனிதத்துவத்தில் வளரவும், அனைத்து மனித குலத்திற்கான இறையன்பின், மேலும் காணக்கூடிய அடையாளமாக விளங்கவும் உதவுமாறு இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், குறிப்பாக ஆப்ரிக்கக் கண்டத்தில் எபோலா நோயால் துன்புறும் மக்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏற்கனவே பல்வேறு நிலைகளால் துன்புற்றுவரும் ஆப்ரிக்க மக்களை இந்நோயும் சேர்ந்து வாட்டுவதாக தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செபத்துடன் அவர்கள் அருகாமையில் இருப்பதோடு, அவர்களுடன் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள், சுயவிருப்பப் பணியாளர்கள், திருஅவை நிறுவனங்கள், துறவுசபைகள், இயக்கங்கள் என அனைத்துப் பணியாளர்களுக்கும் தன் ஊக்கத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார். நோயுற்றுள்ள மக்களோடு வீரத்துவ சேவையாற்றிவரும் இவர்களைப் பாராட்டும்வேளையில், இந்நோயை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைத்துலகச் சமுதாயம் மேற்கொள்ளவேண்டும் என்ற என் விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோயால் இறந்தோருக்காகவும் பாதிக்கப்பட்டுள்ளோருக்காகவும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.