2014-10-29 15:39:43

சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்


அக்.29,2014. தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிமக் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உபகாரம்பிள்ளை சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிமக் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11ம் தேதி பிறப்பித்தது.
இந்நிலையில், சுரங்க முறைகேடு குறித்த சகாயம் விசாரணைக் குழு நியமனத்திற்கு எதிராக, சகாயம் குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தொழிற்துறை செயலாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மறு சீராய்வு மனு இச்செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியார் அடங்கியக் குழு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய காரணம் என்ன என உயர் நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.