2014-10-29 15:32:57

குழப்பம் சூழ்ந்துள்ள துருக்கி நாட்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு, திருத்தந்தையின் வருகை ஒளியைக் கொணரும்


அக்.29,2014. துருக்கியின் வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடியான நிலை உருவாகியிருந்தாலும், இவ்வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருகை தர இசைந்தது, நம்பிக்கையைத் தந்துள்ளது என்று அந்நாட்டின் அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
'காலத்தின் குரல்' என்று பொருள்படும் "La Voce del Tempo" என்ற இத்தாலிய இணையதள வார இதழின் முதல் பதிப்பிற்கென பேட்டியளித்த அருள்பணி Martin Kmetec அவர்கள், இருளும், குழப்பமும் சூழ்ந்துள்ள துருக்கி நாட்டின் கிறிஸ்தவ சமூகத்திற்கு, திருத்தந்தையின் வருகை ஒளியைக் கொணரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர்கள், Constantinopleஐத் தலமைப்பீடமாகக் கொண்டு பணியாற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பது, இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றாலும், துருக்கியில் வாழும் கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் சபையினர், ஏனைய கிறிஸ்தவ சபையினர் அனைவருக்கும் மகிழ்வையும் நம்பிக்கையையும் உருவாக்கும் பயணமாக இது அமையும் என்று அருள்பணி Kmetec அவர்கள் எடுத்துரைத்தார்.
துருக்கியிலும், பொதுவாக மத்தியக் கிழக்குப் பகுதியிலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவரும் வேளையில், திருத்தந்தையின் பயணம், துருக்கியில் வாழும் பெரும்பான்மையினரான இஸ்லாமியரோடு நல்லுறவை வளர்க்கும் என்ற நம்பிக்கையையும் அருள்பணி Kmetec அவர்கள் வெளியிட்டார்.
1967ம் ஆண்டு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பால் அவர்களும், 1979ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், 2006ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் துருக்கி நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.