2014-10-29 15:32:26

அக்.30,2014. புனிதரும் மனிதரே : நோயுற்றிருந்தபோதும் சூதாடி மகிழ்ந்தவர் (St. Camillus de Lellis)


1550ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி இத்தாலியின் நாப்போலி மன்னராட்சியின்கீழ் இருந்த பொக்கியானிக்கோ எனுமிடத்தில் பிறந்தார் கமிலஸ் தெ லெல்லிஸ். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். தன் பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் இழந்து மிகவும் ஏழையானார். துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் தனது 17வது வயதில் சேர்ந்தார் கமிலஸ். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவமனையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அங்கு கப்புச்சின் சபை அருள்பணியாளர் ஒருவர் ஆற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது. அதன்பின் தானும் ஓர் அருள்பணியாளராக வேண்டுமென்று விருப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்தவுடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்பத்தை தெரிவித்தார் கமிலஸ். அங்கு அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டாலும், புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவப் பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, புனித பிலிப் நேரியால் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். தன் இரு சக குருக்களோடு இணைந்து ஒரு சபையை நிறுவினார் கமிலஸ். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளைத் தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும், தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. நோயாளிகளுக்குப் பணிபுரிவதற்கான ஒரு துறவு சபையாக, கமெல்லியன் துறவு சபையை 1591ம் ஆண்டில் அங்கீகரித்தார் திருத்தந்தை 14ம் கிறகரி. ஹங்கேரியிலும் குரோவேசியாவிலும் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு பணிபுரிய தன் துறவு சபையினரை அனுப்பி வைத்தார் கமிலஸ். பல ஆண்டுகளாக நோயுற்றிருந்த இவர், 1607ம் ஆண்டு உரோமையில் காலமானார். 1746ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோவால் புனிதராக அறிவிக்கப்பட்டார் கமிலஸ் தெ லெல்லிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.