2014-10-28 13:57:22

புனிதரும் மனிதரே - "அனைத்திற்கும், இறைவனுக்குப் புகழ்"


அந்தியோக்கு நகரில் அரசாண்ட Theodosius என்பவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை மேற்கொண்டனர். மன்னர் தனக்கென நிறுவியிருந்த சிலைகளை மக்கள் தகர்த்தனர். கோபமடைந்த மன்னர், மக்கள் மீது தன் படையை ஏவினார். அவ்வேளையில் அந்தியோக்கு நகரில் அருள்பணியாற்றிவந்த ஜான் கிரிசோஸ்தம் (St John Chrysostom) அவர்கள், மக்களுக்கு தவக்கால மறையுரைகள் வழங்கினார். அவர் வழங்கிய மறையுரைகளைக் கேட்ட மக்கள் மனம் மாறி, கிறிஸ்தவ மறையைத் தழுவியதோடு, மன்னருக்கு எதிரான கிளர்ச்சியையும் கைவிட்டனர். எனவே, மன்னரும் மக்கள் மீது தான் ஏவியிருந்த படையினரைத் திரும்பப் பெற்றார்.
397ம் ஆண்டு, கான்ஸ்டான்டிநோபிளின் பேராயராகப் பொறுப்பேற்ற கிரிசோஸ்தம் அவர்கள், அக்காலத்தில் பேராயர்கள், உயர்குடி மக்களுக்கு வழங்கிவந்த ஆடம்பர விருந்துகளை வழங்க மறுத்தார். எனவே, செல்வந்தர்களின் கோபத்திற்கு இலக்கானார்; ஆனால், எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.
உயர்குடியைச் சேரந்த பெண்கள், தாறுமாறாக உடையணிந்து வலம் வந்ததை, பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள் கண்டனம் செய்தார். பேராயர் தன்னைப்பற்றியே இவ்வாறு பேசுகிறார் என்று, மன்னர் Arcadiusன் மனைவி, Aelia Eudoxia எண்ணியதால், கிரிசோஸ்தம் அவர்களை நாடுகடத்த மன்னரைத் தூண்டினார். மன்னரும் அவ்வாறே செய்தார். பேராயர் நாடுகடத்தப்பட்டதை அறிந்த எளிய மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், மன்னர் Arcadius, பேராயரை மீண்டும் வரவழைத்தார்.
தன் மறைமாவட்டத்திற்கு திரும்பிவந்த பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள், பேராயலத்திற்கு அருகே அரசி Eudoxiaவுக்கு சிலையொன்று நிறுவப்பட்டதை வன்மையாகக் கண்டித்தார். எனவே, அவர் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்.
இந்நிலையில், 407ம் ஆண்டு, செப்டம்பர் 14ம் தேதியன்று, Cormana என்ற இடத்தில் பேராயர் கிரிசோஸ்தம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். "அனைத்திற்கும், இறைவனுக்குப் புகழ்" என்பன, புனித ஜான் கிரிசோஸ்தம் அவர்கள் தன் மரணத்திற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளாக அமைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.