2014-10-28 15:18:12

திருத்தந்தை : திருஅவையின் முகப்பிலேயே நின்றுவிடாமல் அதற்குள் இருங்கள்


அக்.28,2014. மனிதரின் பாவத்தைப் பார்க்காமல், மனிதரின் இதயத்தை நோக்கி அதைக் குணப்படுத்த முயற்சிக்கும் இயேசுவை திருஅவை அறிவிக்கின்றது, எனவே கிறிஸ்தவர்கள் திருஅவையின் ஒருங்கிணைந்த ஓர் அங்கமாக உணர்ந்து, அதன் கதவருகிலேயே நின்றுவிடாமல் அதற்குள் இணைந்திருக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தூதர்கள் சீமோன், யூதா விழாவான இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இயேசு திருத்தூதர்களை அழைத்ததோடு திருஅவை பிறந்தது பற்றிக் கூறும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து திருஅவையை அமைத்து அதற்கு அடித்தளமாகவும், மூலைக்கல்லாகவும் தம்மையே வைத்த பணியை திருஅவை செய்து வருகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து மனிதரின் பாவங்களைக் கணக்கிடாமல் மனிதரை அன்புகூருவதிலும், அவர்களைக் குணப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டிருந்ததால், திருஅவையும், எவ்விதப் பாகுபாடுகளுமின்றி ஒவ்வொருவருக்கும் தனது கதவுகளைத் திறந்து வைத்துள்ளது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
நாம் அனைவரும் திருஅவையின் குடிமக்கள், இந்த ஆலயத்துக்குள் நாம் நுழையாவிட்டால், நம்மில் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாரால் கட்டப்பட்ட திருஅவையின் அங்கமாக நாமே உணராவிட்டால் நாம் திருஅவையில் இல்லை, மாறாக, அதன் கதவருகிலே நிற்கிறோம் என்றும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.