2014-10-28 15:18:05

திருத்தந்தை : தவணைமுறையில் இடம்பெறும் மூன்றாம் உலகப் போர்க் காலத்தில் வாழ்ந்துவருகிறோம்


அக்.28,2014. நாம் மூன்றாம் உலகப் போர்க் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இப்போர் தவணைமுறை அடிப்படையில் இடம்பெறுகின்றது, இந்தப் போர்கள் தொடர்ந்து நடைபெற உதவும் பொருளாதார அமைப்புகளும் உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையினல் நடத்தப்படும் உலக பொதுமக்கள் இயக்கங்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 200 பிரதிநிதிகளை இச்செவ்வாயன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, சில பொருளாதார அமைப்புகள் ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன, இதைக்கொண்டு பணம் என்ற கடவுளின் காலடியில் மனிதர் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறினார்.
வறுமை, வீடின்மை, சுற்றுச்சூழல், அமைதி, வேலைவாயப்பின்மை என பல தலைப்புக்களில் பேசிய திருத்தந்தை, உரிமைகள் மற்றும் மனித மாண்புக்கானப் போராட்டங்களைத் தொடருமாறு ஊக்கப்படுத்தினார்.
வீடற்ற குடும்பங்கள் என்று இனிஇல்லை, நிலமற்ற விவசாயிகள் என்ற நிலை இனிமேல் இருக்கக் கூடாது, உரிமைகளற்ற தொழிலாளர்கள் என்ற நிலை வேண்டாம், மாண்புடன்கூடிய வேலை செய்யும் மனிதர் இருக்க வேண்டும் என, இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்வோம் என்று கூறினார் திருத்தந்தை.
சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக, திருப்பீட சமூக அறிவியல் துறை மற்றும் பொதுமக்கள் இயக்கங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை இக்கூட்டத்தை நடத்துகிறது.
தொழிலாளர் உரிமைகள் அல்லது தொழிற்சங்கங்களால் பாதுகாக்கப்படாத குடியேற்றதாரர், சுயமாக வேலைசெய்வோர், வேலையில் பாதுகாப்பை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குவோர், நிலமற்ற விவசாயிகள், பழங்குடியினத்தவர், வன்முறையாலும் நிலஅபகரிப்பாலும் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவோர், சேரிகளில் வாழ்வோர், போதுமான உள்கட்டமைப்பு வசதிகளின்றி வாழ்வோர் போன்றோருக்கான பொது அமைப்புகளின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை நடத்தும் இம்மூன்று நாள் கூட்டம் இப்புதனன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.