2014-10-27 16:02:46

மத்திய கிழக்குப் பகுதியில் பன்னாட்டுச் சமுதாயத்தின் உறுதியான தலையீடு அவசியம், கீழை வழிபாட்டுமுறை ஆயர்கள்


அக்.27,2014. மத்திய கிழக்குப் பகுதியில் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துக் குழுவினரையும் சார்ந்துள்ள பன்னாட்டுச் சமுதாயத்தின் தெளிவான மற்றும் உறுதியான தலையீடு இல்லாமல் அப்பகுதியில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படாது என்று கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உக்ரேய்ன் கிரேக்க – கத்தோலிக்கத் திருஅவை சட்டமுறையில் அங்கீகரிக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவாக, உக்ரேய்னின் Lviv நகரில் கூட்டம் நடத்தி இஞ்ஞாயிறன்று அறிக்கை வெளியிட்ட ஆயர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியையும் ஒப்புரவையும் ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், சமய சுதந்திரத்தையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதாய், உரையாடலில் ஆர்வம்கொண்ட புதிய தலைமுறைகளை கல்வியின் மூலம் உருவாக்குவதாய் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறையால் துன்புறும் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவருடனும், இன்னும், உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இராணுவத் தாக்குதல்களால் தொடர்ந்து துன்புறும் மக்களுடனும் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும், அவர்களுக்கானத் தங்களின் செபத்தையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மேலும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு மிகுந்த ஈடுபாட்டுடன் உழைக்கும் என்ற உறுதியையும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, உக்ரேய்னில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மேற்கத்திய கொள்கைகளின் ஆதரவாளர்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.