2014-10-27 16:02:27

திருத்தந்தை: இன்றையக் கலாச்சாரத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


அக்.27,10,2014. தன் படிப்பினைகள், எடுத்துக்காட்டுகள், பணிகள் வழியாகவும், திருஅவை மீது கொண்டிருக்கும் பற்றுதல் வழியாகவும், தற்போது மேற்கொண்டுள்ள துறவு வாழ்வு வழியாகவும் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் அறிவியல் கல்விக்கழகத்தினர் கொணர்ந்த, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மார்பளவு உருவச்சிலையை திறந்துவைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை இறையியலில் மட்டுமல்ல, மக்களுக்கும் திருஅவைக்குமான அன்பிலும், பக்தியிலும் சிறந்து விளங்கினார் என்றார்.
அவரின் ஆர்வம் மெய்யியலோடும் இறையியலோடும் நிற்கவில்லை, அறிவியலிலும் அது வெளிப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றையக் கலாச்சாரத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்திருந்ததாலேயே புதிய நற்செய்தி அறிவிப்புக்குறித்த ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு திருப்பீட அறிவியல் கழகத்தின் தலைவரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைத்திருந்தார் என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தையின் கல்வியும் அறிவியல் ஆர்வமும், கடவுள் மற்றும் அயலார் மீதான அன்பும் அவரின் இதயத்தை விரிவாக்க உதவியுள்ளது என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.