2014-10-27 16:02:39

திருத்தந்தை : இறை அன்பும் சகோதரத்துவ அன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்


அக்.27,10,2014. இறைவனை அன்புகூர்வது குறித்தும் அயலாரை அன்புகூர்வது குறித்தும், இறைவன் உரைத்த கட்டளைகள் இரண்டாகத் தெரிந்தாலும், ஒரே சட்டத்தின் இருமுகங்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தின் அளவுகோல் அன்பு, அந்த அன்பின் ஆன்மாவே விசுவாசம் எனவும் தெரிவித்தார்.
இறைவன் மீதான அன்பு மற்றும் நம் சகோதரர் மீதான அன்பின் மையத்திற்கே அனைத்தும் திரும்பி வருகின்றன எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் முகமே நம் நலிவடைந்த சகோதர சகோதரிகளில் பிரதிபலிப்பதால், நாம் அவர்களை அன்புகூரும்போது இறைவனையே அன்புகூருகிறோம் என்றார்.
ஒருவரின் ஆன்மீக வாழ்வை, நலிவடைந்த சகோதரர்களுக்கான சேவையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏழைகளாயிருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு செவிமடுப்பது, அவர்கள் வாழ்வுக்கும் காயங்களுக்கும் நெருக்கமாக இருப்பது என்பது, இயேசுவை செபத்தில் சந்திப்பதோடு இணைந்தவை என்ற திருத்தந்தை, இறையன்பும் பிறரன்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றார்.
இறைவன் மீதான அன்பின்றி நம் அயலாரை நாம் அன்பு கூர இயலாது எனவும், அயலாரை அன்புகூராமல் இறைவனை அன்புகூர இயலாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் மீதான நம் அன்பை வெளிப்படையாகக் காட்டுவதற்கான சிறந்த வழி நம் அயலவர் மீது அன்புகூர்வதேயாகும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.