2014-10-25 15:50:17

வயதானவர்களிடம் மிகுந்த அக்கறை காட்டுமாறு திருத்தந்தை அழைப்பு


அக்.25,2014. “இயேசுவின் சிலுவை தீமையின் முழு சக்தியைக் காண்பிக்கிறது, ஆனால், அது கடவுளின் கருணையின் முழு வல்லமையையும் காட்டுகிறது” என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், நம் தாத்தா பாட்டிகளை நம் குடும்பங்களோடு ஒன்றிணைத்து, அவர்கள் குடும்பங்களின் ஓர் அங்கம் என்பதைத் தொடர்ந்து உணரச்செய்ய வேண்டுமென்று திருத்தந்தை கூறியதாக, இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் ஃபாபியன் ரொமானோ தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்த பின்னர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரொமானோ அவர்கள், தாத்தா பாட்டிகள்மீது அக்கறை காட்டாத, அவர்களை நன்கு நடத்தாத மக்களுக்கு எதிர்காலம் இல்லை என்று திருத்தந்தை கூறியதாக மேலும் தெரிவித்தார்.
உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, 2050ம் ஆண்டுக்குள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் உலகின் மக்கள் தொகையில் 22 விழுக்காடாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.