2014-10-25 13:50:01

பொதுக்காலம் 30ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவனைப்பற்றி அவனது தந்தையிடம் முறையிட்டார்: "ஐயா! ஒங்க பையன் வகுப்புல சரியாவே பதில் சொல்ல மாட்டேங்கறான். இன்னக்கி அவன்கிட்ட 'கம்பராமாயணத்தை எழுதியது யார்'ன்னு கேட்டேன். அதுக்கு உங்க மகன் 'திருவள்ளுவர்'ன்னு சொல்றான்" என்று ஆசிரியர் முறையிட்டதும், தந்தை அவரிடம், "சார், கோவிச்சுக்கக் கூடாது. நீங்க 'திருக்குறள எழுதுனது யார்'ன்னு கேட்டிருந்தா, என் பையன் 'திருவள்ளுவர்'ன்னு சரியா பதில் சொல்லியிருப்பான். நீங்க கேள்வியைத் தப்பா கேட்டுட்டீங்க" என்று சொன்னார். எப்போதோ படித்த ஒரு சிரிப்புத் துணுக்கு இது. என்னை சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்த துணுக்கு இது. தப்பான கேள்விகள் கேட்கமுடியுமா என்று என்னைச் சிந்திக்க வைத்த அத்துணுக்கு, இந்த ஞாயிறு சிந்தனைக்கு உதவியாக உள்ளது.
கேள்விகளும், கேள்விகள் கேட்பதும் மனித வாழ்வின் முக்கியமான ஓர் அம்சம். கேள்வி கேட்பதுபற்றி மற்றொரு கதை இதோ... இயற்பியலில் நொபெல் பரிசு பெற்றவரும், அணு குண்டு ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவருமான Isidor Isaac Rabi என்பவரைப் பற்றிய கதை இது. இவர் நொபெல் பரிசு பெற்றதும் அளித்த ஒரு பேட்டியில், தான் அறிவியலில் ஆர்வம் கொண்டதற்கு தன் தாயே முக்கியக் காரணம் என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் Isidor பள்ளியிலிருந்து திரும்பிவந்ததும், அவருடைய தாய் அவரிடம் அன்று பள்ளியில் அவர் என்ன படித்தார், எப்படி நடந்து கொண்டார் என்றெல்லாம் கேட்காமல், “இன்று நீ பள்ளியில் நல்லதொரு கேள்வியைக் கேட்டாயா?” என்று மட்டும் அவரிடம் விசாரிப்பாராம். நல்ல கேள்வியைக் கேட்பதற்கு தன் தாய் ஒவ்வொரு நாளும் தன்னை ஊக்கப்படுத்தியதே, தன்னை அறிவியலில் ஆர்வம் கொள்ளவைத்தது என்று Isidor சொன்னார்.

வாழ்வில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. உண்மையான ஆர்வத்துடன், எளிய மனதுடன் இந்தப் பாடங்களைப் பயில மனம் இருந்தால்... சரியான, நல்ல கேள்விகளை ஒவ்வொரு நாளும் நாம் கேட்டு, பயனடைய முடியும். அல்லது தப்புக் கேள்விகள் கேட்டு, திண்டாடவும் வேண்டியிருக்கும்.
நமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள கேட்கப்படும் கேள்விகள் அறிவியலாளர் Isidorஐப் போல் நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறது என்பதை இடித்துச் சொல்வதற்காக கேள்விகள் கேட்கும்போது, நமது பெருமை கலந்த அறியாமை அங்கு பறைசாற்றப்படும்.
நான் ஆசிரியர் பணியில் இருந்தபோது, என் வகுப்பில் என்னைவிட நல்ல திறமையும் அறிவும் மிக்க மாணவர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் எப்போதாவது என்னைச் சங்கடத்தில் சிக்கவைப்பதற்கு கேள்விகள் கேட்பதுண்டு. பதில்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்னைச் சோதிக்கும் நோக்கத்தில் அவர்கள் கேள்விகள் கேட்கின்றனர் என்பதைச் சில வேளைகளில் அவர்கள் கேட்கும் தொனியிலேயே நான் புரிந்துகொள்வேன். அத்தகையச் சூழல்களைப் பல வழிகளில் நான் சமாளித்திருக்கிறேன். ஆனால், அச்சூழல்களில் அறிவை வளர்க்கும் கேள்வி பதில் பரிமாற்றத்தை விட, நீயா, நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான பெருமை தலைதூக்கியதை உணர்ந்திருக்கிறேன்.

இயேசுவின் வாழ்வில் இதுபோன்ற ஒரு சூழல் உருவானதை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்:
மத்தேயு நற்செய்தி 22: 34-36
இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் இயேசுவைச் - சோதிக்கும் நோக்கத்துடன், போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

சீசருக்கு வரி செலுத்துவது சரியா தவறா என்று, இயேசுவுடன் மதத் தலைவர்கள் சென்ற வாரம் துவக்கிய அரசியல் விளையாட்டு, மற்றொரு வடிவத்தில் தொடர்கிறது. திருச்சட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஓர் அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்கிறார். இயேசு தன்னைப்போல் திருச்சட்டங்களைப் படித்தவர் அல்ல என்பது அந்த அறிஞருக்கு நன்கு தெரியும். இயேசுவின் அறியாமையை மக்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தக் கேள்வியை அறிஞர் கேட்கிறார்.
தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் சொல்கிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில். மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகள் நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 22: 36-40
போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டவரிடம், இயேசு, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாகஎன்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றனஎன்று பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று நற்செய்திகளும் ஒரே நிகழ்வை வெவ்வேறு வகையில் கூறியுள்ளன. இந்த வேறுபாடுகளைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். மத்தேயு நற்செய்தியில், இயேசு கூறிய இந்த பதிலோடு இச்சம்பவம் முடிவடைகிறது. மாற்கு நற்செய்தியில், இயேசுவின் பதிலால் மகிழ்வடைந்த அறிஞர் இயேசுவைப் புகழ்கிறார். இயேசுவும் அந்த அறிஞரின் அறிவுத் திறனைக் கண்டு, "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" (மாற்கு 12:34) என்று அவரைப் பகழ்வதாக இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது.
இயேசுவும், திருச்சட்ட அறிஞரும் எதிர், எதிர் அணிகளில் இருந்தாலும், ஒருவரையொருவர் புகழ்வது, நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது. ஒருவர் தன்னைச் சரியாகப் புரிந்துகொண்டு, தன்னைப் பற்றி உண்மையான மதிப்பும், பெருமையும் கொண்டிருந்தால், அடுத்தவரை, அவர் தன் எதிரியே ஆனாலும், அவரையும் மதிக்கும் பண்பு கொண்டிருப்பார் என்பது மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12: 28-34) கூறப்பட்டுள்ள இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பாடம்.

லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மாறுபட்ட ஒரு சூழலை நாம் காண்கிறோம். மறைநூல் அறிஞரின் குதர்க்கமான கேள்விகள் தொடர்வதை நாம் காண்கிறோம். இறைவனையும் அடுத்தவரையும் அன்பு செய்வதே அனைத்து சட்டங்களின் அடிப்படை என்ற இந்த அழகான பதிலை, தானே கூறாமல், கேள்வி கேட்ட திருச்சட்ட அறிஞரின் வாயிலிருந்தே இயேசு வரவழைக்கிறார் என்று லூக்கா நற்செய்தி சொல்கிறது. அவர் தந்த நல்ல பதிலைப் புகழ்ந்து இயேசு அவரிடம் சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் (லூக்கா 10: 28) என்று சொல்லி அவரை வழியனுப்புகிறார். ஆனால், திருச்சட்ட அறிஞர் விடுவதாக இல்லை. தனது திறமையை இயேசுவிடம், சூழ இருந்தவர்களிடமும் காட்டும் நோக்கத்துடன், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியைத் தொடுக்கிறார். அந்தக் கேள்விக்கும் இயேசு பொறுமையாய் பதில் தருகிறார். இயேசு கூறிய இந்தப் பதில், காலத்தால் அழியாத புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையாகத் தரப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இவ்வுவமையின் துவக்கத்திலும் முடிவிலும் இயேசு அந்த அறிஞரிடம் கூறிய ஓர் அறிவுரை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது. நல்ல சமாரியர் உவமைக்கு முன்னர், சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் என்றும், உவமைக்குப் பின், நீரும் போய் அப்படியே செய்யும் (லூக்கா 10: 37) என்றும் இயேசு சொல்கிறார்.
திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப் பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்து கொள்வது முக்கியமல்ல அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதே முக்கியம் என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இறையன்பைப் பற்றி கோடான கோடி மறை நூல்கள், மறையுரைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. பிறரன்பைப் பற்றியோ மதங்கள் மட்டுமல்லாமல், மதநம்பிக்கையற்ற நிறுவனங்களும் இன்று பேசி வருகின்றன. இவை அனைத்தும் புத்தகங்களில் பாடங்களாக மட்டும் தங்கி விடாமல், செயல் வடிவம் பெறுவதே இன்றைய உலகில் கிறிஸ்துவின் மறையை, அன்பு மறையைப் பரப்பும் பணியாக இருக்க வேண்டும்.

உலகமெல்லாம் ஒரே குடும்பம் என்ற மாயையை நம் வர்த்தக உலகமும், தொடர்பு சாதனங்களும் உருவாக்கி வருகின்றன. முக்கியமாக உலகின் அனைத்து இளையோரையும் எண்ண ஓட்டங்களாலும், நடை உடை பாவனைகளாலும் ஒரே உலகக் குடும்பம் என ‘காட்டும் முயற்சிகள்’ வர்த்தக உலகால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் பிளவுகளும், பிரிவுகளும் கூடி வருகின்றனவே ஒழிய, குறைவதாகத் தெரியவில்லை. பல்வேறு கருவிகள் மூலம் தொடர்புகளை வலுப்படுத்தும் வர்த்தக உலகம், தொடர்பு சாதன உலகம் அதே வேளையில், உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் அனைவருமே அன்னியராகத் தெரிகின்றனர்.
அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரை ஒருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.

விடுதலைப் பயணம் 22: 20-26 மற்றும் 27
ஆண்டவர் கூறியது: ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும். அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இரக்கம் நிறைந்த அந்த இறைவனின் வார்த்தைகள் நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்குமா? இயேசு சொன்னதுபோல், இறையன்பையும், பிறரன்பையும் நாம் வாழ்வில் செயல்படுத்த முடியுமா? முயன்றால் முடியும். தேவையான அருளை வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.