2014-10-25 13:49:55

புனிதரும் மனிதரே - பெத்லகேமில் பிறந்த புனிதர்


2ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிறிஸ்தவர்களை வேட்டையாடிக் கொல்வதில் உரோமைய அரசு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. அந்நேரம் திருத்தந்தையாகப் பணியாற்றிவந்த எவரிஸ்துஸ் (St Evaristus) அவர்களை உரோமையப் படைவீரர்கள் கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறையை நோக்கி நடந்த திருத்தந்தை எவரிஸ்துஸ் அவர்களின் முகத்தில் காணப்பட்ட மகிழ்வையும், அமைதியையும் கண்டு, உரோமைய வீரர்கள் வியந்தனர். இயேசுவுக்காக துன்புற்று மரணமடைய இறைவன் தன்னைத் தேர்ந்துள்ளார் என்ற மகிழ்வில் திருத்தந்தை எவரிஸ்துஸ் சிறைக்குச் சென்றார்.
இயேசு பிறந்த பெத்லகேமில், யூத குடும்பத்தில் பிறந்த எவரிஸ்துஸ் அவர்களின் பெற்றோர், கிரேக்க நாட்டிற்குப் புலம் பெயர்ந்து சென்றனர். அறிவுத்திறன் அதிகம் கொண்டிருந்த எவரிஸ்துஸ், தலைசிறந்த கிரேக்க அறிஞர்களிடம் கல்வி பயின்றார்.
தன் இளவயதில் கிறிஸ்தவ மறையைத் தழுவிய எவரிஸ்துஸ் அவர்கள், அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, உரோம் நகரில் பணியாற்றச் சென்றார். அவரது அருள்பணியால் பலர் கிறிஸ்தவர்களாக மாறினர். அவ்வேளையில், திருத்தந்தையாக இருந்த முதலாம் கிளமெண்ட் அவர்கள் கொலை செய்யப்பட்டதால், எவரிஸ்துஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
திருத்தந்தையாக இருக்க தனக்கு எவ்விதத் தகுதியும் இல்லை என்று அவர் மறுத்தாலும், அவர் அப்பணியை ஏற்க வேண்டியதாயிற்று. எட்டு ஆண்டுகளே திருத்தந்தையாகப் பணியாற்றிய எவரிஸ்துஸ் அவர்கள், கி.பி. 107ம் ஆண்டு மறை சாட்சியாகக் கொலை செய்யப்பட்டார். புனித எவரிஸ்துஸ் அவர்களின் திருநாள் அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.