2014-10-24 15:33:21

திருத்தந்தை : திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைப்புப் பெற்றுள்ளார்


அக்.24,2014. பன்மைத்தன்மையில் ஒருமைப்பாட்டை உருவாக்கும் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்குத் தன்னை அனுமதித்து திருஅவையின் ஒன்றிப்புக்காக உழைப்பதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ்ந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ளுங்கள் என்று, புனித பவுலடிகளார் எபேசியருக்கு எழுதிய திருமடலில் கூறியதை மையமாக வைத்து மறையுரையாற்றினார்.
திருஅவையின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதே, வரலாற்றில் திருஅவையின் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் பணியாகும் என்றுரைத்த திருத்தந்தை, திருத்தூதர், திருஅவை பற்றிப் பேசும்போது, உயிருள்ள கற்களாலான ஆலயம் பற்றிப் பேசுகிறார், அவ்வாலயம் நாமே என்றும், இதற்கு எதிரான தற்பெருமை ஆலயம், பாபேல் கோபுரம் என்றும் எச்சரித்தார்.
உயிருள்ள ஆலயம் ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், தற்பெருமை ஆலயம், ஒற்றுமையின்மை, புரிந்துகொள்ளாமை போன்றவற்றின் அடையாளமாகவும் உள்ளன என்றும் கூறிய திருத்தந்தை, திருஅவையின் ஒருமைப்பாட்டை, திருஅவையைக் கட்டியெழுப்புவது, நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் கூறினார்.
ஓர் ஆலயத்தை அல்லது ஒரு கட்டிடத்தைக் கட்டும்பொழுது, முதலில் அதற்குத் தகுதியான இடத்தைக் கண்டுபிடித்து, பின்னர் மூலைக்கல்லை நடுவார்கள் என விவிலியம் சொல்கிறது, திருஅவை ஒருமைப்பாட்டின் மற்றும் அதன் மூலைக்கல் இயேசுவே, திருஅவை ஒருமைப்பாட்டிற்காகவே இயேசு இறுதி இராவுணவில் செபித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு என்ற பாறையின்மீது திருஅவையின் ஒருமைப்பாட்டை நாம் கட்டியெழுப்புகிறோம், இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டிராத ஒன்றிப்பு கிடையாது, இந்த ஒன்றிப்பைக் கட்டுவது தூய ஆவியாரின் பணியாகும், பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தூய ஆவியாரே திருஅவையின் ஒருமைப்பாட்டைக் கட்டுகிறார் என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.