2014-10-23 15:02:00

புனிதரும் மனிதரே: படைவீரர் புனிதர் (St.John of Capistrano)


துருக்கி நாட்டு ஒட்டமான் பேரரசர் 2ம் முகமது அவர்கள், 1453ம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிளை தனது ஆளுகையின்கீழ் கொண்டுவந்தார். இது கிறிஸ்தவ ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனவே அதற்கு அடுத்த ஆண்டில் அப்போதைய திருத்தந்தை 3ம் கலிஸ்துஸ் அவர்கள், பிரான்சிஸ்கன் துறவியாகிய ஜான் கப்பிஸ்த்ரானோ அவர்களிடம், துருக்கியருக்கு எதிராகச் சிலுவைப்போர் தொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது துறவி ஜானுக்கு வயது எழுபது. இவர் தனது பணிக்கு முதலில் ஜெர்மனியிலும் ஆஸ்ட்ரியாவிலும் ஆதரவு தேடினார். சிறிதளவு ஆதரவே அங்குக் கிடைத்ததால் ஹங்கேரி சென்றார், ஆதரவையும் பெற்றார். போதுமான படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு, 1456ம் ஆண்டு கோடை காலத்தில், அப்போது துருக்கியப் படைகளின் ஆக்ரமிப்பிலிருந்த பெல்கிரேடு நோக்கி, திருச்சிலுவையை ஏந்திக்கொண்டு படையெடுத்தார் எழுபது வயதான துறவி ஜான். இதில் இவர் வெற்றியும் அடைந்தார். ஆயினும், அக்காலத்தில் இராணுவத்தில் நிலவிய சுத்தமற்ற நலவாழ்வுச் சூழல்களால் இவர் கொள்ளைநோயால் தாக்கப்பட்டு அவ்வாண்டு அக்டோபர் 23ம் தேதி இறந்தார். இதனால் ஜான் கப்பிஸ்த்ரானோ, படைவீரர் புனிதர் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தாலியின் அப்ருஸ்ஸோ மாநிலத்தில் கப்பிஸ்த்ரானோவில் பிறந்த(ஜூன்24,1386) ஜான் ஒரு வழக்கறிஞர். இவரை Naples அரசர் லடிஸ்லாவுஸ், 1412ம் ஆண்டில் பெருஜியாவின் ஆளுனராக நியமித்தார். அப்போது பெருஜியாவுக்கும், பக்கத்து ஊருக்கும் இடையே நடந்த சண்டையில் அமைதியின் தூதவராக அனுப்பப்பட்ட ஜான், எதிரிகளால் ஏமாற்றப்பட்டு சிறைவைக்கப்பட்டார். இச்சிறை வாழ்வில் புனித பிரான்சிஸ் கனவில் அறிவுறுத்தியபடி, அங்கிருந்து வெளியே வந்த பின்னர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார் ஜான். கடும் தப வாழ்வை மேற்கொண்ட இவர், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, குரோவேஷியா, போலந்து, நார்வே என ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து மறைப்பணியாற்றினார். இவரது உரைகளைக் கேட்பதற்கு வரும் மக்களுக்கு ஆலயங்களில் இடம் போதாதாம். ஒருமுறை 1,26,000 பேர் கூடியிருந்தார்களாம். புனித பெர்னார்டின் போன்று இவர் இயேசுவின் திருப்பெயரின் பக்தியைப் பரப்பினார். திருத்தந்தையர்களால் பல அரசர்களிடம் இவர் தூதுவராக அனுப்பப்பட்டார். புனித ஜான் கப்பிஸ்த்ரானோ பிரான்சிஸ்கன் சபைச் சீர்திருத்தத்தின் நான்கு பெரிய தூண்களில் ஒருவராக நோக்கப்படுகிறார். இப்புனிதரின் விழா அக்டோபர் 23. இவர், நீதிபதிகள் மற்றும் இராணுவ ஆன்மீக வழிகாட்டிகளுக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.